

ராமேஸ்வரத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் குமார், பாண்டி, ஜான்சன், முருகன் மற்றும் அவர்களது சீனியரான அமீர் ஆகியோர் கடலில் நீச்சலடிக்கப் போகிறார்கள். கரையோரத்தில் ஆபத்திலிருக்கும் ஒரு ஆமைக்கு அவர்கள் உதவுகிறார்கள். காப்பாற்றியதற்கு நன்றியாக அவர்களை, அந்த ஆமை (ஆமையின் பெயர்: ஜூஜோ) கடலுக்குள் தங்கள் உலகத்தைக் காண கூட்டிப்போகிறது.
அப்படிப் போகும்போது கடலில் வாழும் உயிரினங்களைப் பற்றியும், கடலுக்குள்ளே உள்ள அற்புதமான உலகையும் கண்டு வியக்கிறார்கள். திருக்கை மீன்கள், ஜெல்லி மீன்கள், கடல் குதிரைகள், ஆக்டோபஸ்கள் எனப் பல வகையான கடல் நண்பர்களைச் சந்திக்கிறார்கள். அப்போது கடலுக்குள்ளே அவர்களை விழுங்க ஒரு சுறா ஆக்டோபஸுடன் சண்டை போடுகிறது. எல்லாவற்றையும் கடந்து எப்படித் திரும்பவும் கரைக்கு வருகிறார்கள் என்பதுதான் கதை.
ஆழ்கடலுக்குள்ளே உள்ள ஒவ்வொரு உயிரினங்களையும், அவற்றின் பண்புகளையும் தெரிந்துகொள்கிறார்கள் சிறுவர்கள். மனிதர்களால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகக் கடலில் ஏற்படும் பயங்கரங்களையும் கண்கூடாகப் பார்த்துவிட்டுத் திரும்புகிறார்கள்.
வாண்டுமாமா தனது எழுத்துப் பயணத்தின் உச்சத்திலிருந்தபோது ஒரு கதையை எழுதி இருந்தால், எப்படி இருக்கும்? என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டம். குழந்தைகளுக்கான கதைகள் வருவது இப்போது மிகவும் குறைந்துவிட்டது. இந்தப் பின்னணியில் ஒரு தரமான கதையைக் கொடுத்திருக்கிறார் கதாசிரியர் யெஸ்.பாலபாரதி.
கதையில் மொத்தம் 10 அத்தியாயங்கள். அத்தியாயங்களின் எண்ணைத் தெரிவிப்பது ஒரு ஆமை என்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் கடல்சார்ந்த ஒரு அறிவியல் தகவலை ஏந்தி நிற்கிறது மற்றொரு அழகான ஆமை. ஒவ்வொரு அத்தியாயத்தையும் விளக்கும் ஒரு முழுப்பக்க ஓவியம். அத்தியாயத்தின் முடிவில் அவர்கள் சந்தித்த கடல்பிராணியை நினைவூட்டும் வகையில் ஒரு கால் பக்க ஓவியம் என்று புத்தகம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தைச் சிறுவர், சிறுமிகள் ஏன் படிக்க வேண்டும் தெரியுமா? கடல் நீர் ஏன் நீலமாக இருக்கிறது?, தற்போது உலகிலேயே மிக வயதான ஆமை, சாலமன் மீன்களின் வலசை மற்றும் அதன் பின்னரான சோகம், திருக்கை மீன்களின் தன்மை, ஜெல்லி மீன்கள், பிறந்தவுடன் மணிக்கு 5 கிலோவீதம் எடை அதிகரிக்கும் திமிங்கிலங்கள், 3 இதயங்களுடன், நீல வண்ண ரத்தம் கொண்ட ஆக்டோபஸ்கள், அடுக்கு வரிசையில் பற்களைக் கொண்ட சுறாமீன்கள், 1,000 கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ஆண்டுதோறும் கடலில் கொட்டும் மனிதர்கள், கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் எனப் பல விஷயங்கள் மிகவும் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டே எதையும் திணிக்காமல் கதையின் போக்கில் சொல்லப்பட்ட விதம் காரணமாகச் சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கக்கூடும்.
புத்தகம்: ஆமை காட்டிய அற்புத உலகம்
ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
பக்கங்கள்: 80
விலை: 60
தொடர்புக்கு: 044-24332424, 24332924