

அனிமேஷன் புத்தகம் பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லை என்றால், நீங்களே செய்யலாம். தயாரா?
தேவையான பொருட்கள்:
# இங்க் பேனா
# குறைந்தபட்சம் 30 பக்கங்களுக்கு மிகாமல் வெள்ளைத்தாள் நோட்டுப் புத்தகம்.
செய்முறை:
1. நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்கத்தின் வலது ஓரத்தில் (படம் 1) ஓர் ஓவியத்தை வரைந்துகொள்ளுங்கள். வரைவதற்குக் கஷ்டமாக இருந்தால் படம் 4-ல் உள்ளது போல எளிமையான ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்துகொள்ளுங்கள்.
2. உங்களது ஓவியம் பந்து விளையாடும் சிறுவனாகவோ, நடனமாடும் பொம்மையாகவோ அல்லது உங்கள் கற்பனைக்கேற்ற வகையில் இருக்கலாம்.
3. ஒவ்வொரு பக்கத்திலும் அதே ஓவியத்தைத் திரும்பத் திரும்ப வரையுங்கள். ஆனால், ஓவியத்தைப் படம் 2-ல் இருப்பது போலச் சிறிது சிறிதாக வலது பக்கத்தில் தள்ளித் தள்ளி வரைந்துகொண்டே வாருங்கள்.
4. குறைந்தது 20 பக்கங்களுக்கு மேல் வரையுங்கள். பிறகு புத்தகத்தைப் படம் 4-ல் காட்டியதுபோல இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு சிறிது வேகமாகத் திருப்புங்கள். இப்போது நீங்கள் வரைந்த ஓவியம் நகருவது தெரியும். எவ்வளவு வேகமாகத் திருப்புகிறீர்களோ அவ்வளவு வேகமாக ஓவியம் நகரும்.
இது பார்க்கப் பார்க்க ஆர்வத்தைத் தூண்டும். அனிமேஷன் புத்தகம் செய்ய நீங்கள் தயாராகிவிட்டீர்களா?