

அதிவேகப் போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டன. இன்று நம்மால் நினைத்த நேரத்தில் நாடு விட்டு நாடு போக முடிகிறது. காலையில் இந்தியாவில் டிஃபன், மதியம் சிங்கப்பூரில் சாப்பாடு, இரவு உணவுக்கு ஆஸ்திரேலியா போய்விட முடியும். அதே நேரம், எந்த ஒரு வாகன வசதியும் இல்லாமல் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும்? பாதயாத்திரை செல்பவர்கள்கூட ஒரு நாளைக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் தூரம்தான் நடக்கிறார்கள். வேகமாக ஓடுகிற நாய்கூடக் கொஞ்ச தூரம் ஓடினாலே மூச்சிரைக்கப் படுத்துக்கொள்கிறது.
அப்படியானால், ஒரு பூச்சி எவ்வளவு தூரம் போகும்? அதிகபட்சம் நம் வீட்டைச் சுற்றும். விட்டில் பூச்சி என்றால் விளக்கில் விழுந்து இறந்துவிடும். மீறிப் போனால் ஜன்னலுக்கு வெளியே போய்ப் புதருக்குள் பதுங்கிவிடும். இவைதான் பூச்சிகளைப் பற்றிய நமது கணிப்பு.
ஆனால் ஒரு பூச்சி, கண்டம் விட்டுக் கண்டம் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ‘லோகஸ்ட்’ என்று ஒரு வகை வெட்டுக்கிளிதான் கடல்களைக் கடந்து கண்டம் விட்டுக் கண்டம் இடம்பெயர்கிறது. குறைந்தபட்சம் 100 முதல் 200 கிலோ மீட்டர் வரை தினமும் பயணம் செய்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான உணவு மற்றும் விவசாய நிறுவனம் இந்தப் பூச்சியைத் தொடர்ந்து கவனித்துவருகிறது. ஏன் இவ்வளவு தூரம் அது பயணிக்கிறது? ஐ.நா.வின் அமைப்பு இதை ஏன் கவனிக்கிறது? ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளியின் முக்கியத்துவம்தான் என்ன?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், முக்கியத்துவம் எல்லாம் எதுவும் இல்லை.
பயம்தான் காரணம்.
‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளி தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்துவிட்டால் சிக்கல்தான். மழைக்குப் பிறகு போதுமான ஈரப்பதம் இருக்கும்போது, நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல் போல இந்த ‘லோகஸ்ட்’ உற்பத்தியாகிறது. ஆப்பிரிக்கக் காடுகளில் கடுமையான வறட்சியைத் தொடர்ந்து மழை பெய்யும். மண் ஈரமாகும்போது, இந்த ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் சொல்ல முடியாத அளவுக்கு உற்பத்தியாகும். அதிலும் ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் உற்பத்தியாகும் ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் ரொம்ப ஆபத்தானவை.
ஒரு சதுர கிலோமீட்டரில் 4 கோடி முதல் 8 கோடிவரை ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் உற்பத்தியாகின்றன. வண்டுகள் மாதிரி மண்ணில் உற்பத்தியாகி நகரும் இந்த வெட்டுக்கிளிகள், இறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்க ஆரம்பிக்கின்றன.
இப்படி உற்பத்தியாகிக் கூட்டம் கூட்டமாகப் பறப்பதே பெரிய இடையூறுதான். இதைவிட ஒரு பேராபத்து, இவை உண்ணும் உணவு. பூக்கள், இலைகள், பழங்கள் ஆகியவற்றை இந்த வெட்டுக்கிளிகள் உணவாகச் சாப்பிடுகின்றன. ஆப்பிரிக்க விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்திருக்கும் உணவுப் பொருட்களை இவை சர்வ சாதாரணமாக அழித்துவிடுகின்றன. நாசம் என்றும் ஆபத்து என்றும் இவற்றைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது.
ஆறு மாதங்கள் வரை உயிர் வாழும் இந்த வெட்டுக்கிளிகள் உணவுப் பயிர்களை அழித்ததால், பலமுறை ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.
2003-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாகப் பெய்த மழையால் 10 கோடிக்கும் அதிகமான பூச்சிகள் உருவாயின. பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பயிர்கள் அழிந்துபோயின. இதனால்தான் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம், இந்த ‘லோகஸ்ட்’வெட்டுக் கிளிகளைக் கவனிக்கிறது. கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகளுக்கு உதவியும் செய்கிறது.
ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த ‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தி படைத்தவை. வழக்கமாக, ஆப்பிரிக்காவுக்கு, அரேபியத் தீபகற்பத்திற்கும் இடையே உள்ள செங்கடல் பகுதியைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன. இங்கும் பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன.
எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டும், மனித குலத்தால் இந்த வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்பூச்சிகளைச் சேகரித்து பாப்கார்ன் மாதிரி பொறித்துச் சாப்பிடும் பழக்கம் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. இது மட்டும்தான், இப்பூச்சிகளை மனிதன் வெற்றி கொண்ட ஒரே விஷயம்.
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com