Published : 26 Mar 2014 01:48 PM
Last Updated : 26 Mar 2014 01:48 PM

``சோறுங்கிறதை ஆங்கிலத்துல எப்படி எழுதறது?”

குழந்தைகளிடம் பேசுவதே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் பாட்டு, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் சுடர்விடும் குழந்தைகளிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு சுட்டிக் குழந்தைதான் சைதன்யா.

வித்யோதயா பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி தன்னுடைய வலைப்பூவில், தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதிக் குவித்திருக்கிறார். இந்தியில் விஷாரத் படித்துக்கொண்டிருக்கிறார். அவரின் பள்ளி இதழான `பிரத்யுஷா'வின் ஆசிரியரும் இவர்தானாம்!

நெருங்கிப் பேசும்போது, இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். அட, மிஷ்கினின் `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த அதே குழந்தைதான் இவர். இவரது திரை அறிமுகத்துக்குக் காரணமாக அமைந்ததே இவருடைய மொழிபெயர்ப்புதான்.

எஸ். ராமகிருஷ்ணனின் `கால் முளைத்த கதைகள்' புத்தகத்தை இவர் `நத்திங் பட் வாட்டர்' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் படித்த பின்தான், இவரை நடிக்கவைப்பதற்காக இயக்குநர் மிஷ்கின் அணுகினாராம். அந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தைக் கேட்டவுடன், பட்டாம்பூச்சி போலப் படபடவெனப் பேசத் தொடங்கினார் சைதன்யா!

"நான் தேர்ட் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டிருந்தப்ப, என்னோட தமிழ் பாடத்துல `நீல நரி'ன்னு ஒரு சின்ன கதை. அதை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ணி அப்பாகிட்ட காமிச்சேன். நல்லா இருக்குன்னு சொன்னார். கொஞ்ச நாள் கழிச்சு, ராமகிருஷ்ணன் அங்கிள் எழுதின `கால் முளைத்த கதைகள்'னு ஒரு புக்கை எனக்கு அப்பா படிக்கக் கொடுத்தார். அதில் எல்லாமே சின்னச் சின்ன கதைகளா இருந்துச்சு.

இரவும் பகலும் எப்படி உருவானது? எப்படி வண்ணத்துப்பூச்சி உருவாகிறது? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ற மாதிரி அந்தக் கதைகள் இருந்துச்சு. ஒரு வாரத்துல 10 கதைகளை நான் ஆங்கிலத்துல மொழிபெயர்த்திட்டேன். ஆனா அப்பாகிட்ட சொல்லல.

அப்புறம் எக்ஸாம் வந்துச்சு. அப்புறம் அந்த வருஷ லீவுல, எங்க பாட்டி வீட்டுக்குப் போனேன். போகும்போது கால் முளைத்த கதைகள் புத்தகத்தையும் எடுத்துட்டுப் போனேன். அதில் 80 கதைங்க இருந்துச்சு. லீவுல எல்லாக் கதைகளையும் ஆங்கிலத்துல எழுதி, ஊருக்கு வந்ததும் அப்பாகிட்ட காட்டினேன்.

அப்பா, என்னை ராமகிருஷ்ணன் அங்கிள்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவர் நான் எழுதியதைப் படிச்சுப் பார்த்துட்டு. நீயாகவே சொந்தமா யோசிச்சு இதுபோல எழுதுன்னு சொன்னார். நானாக யோசித்து எழுதிக்கொண்டு போன கதைகளையும் படிச்சுட்டு என்னை ரொம்பவும் பாராட்டினார். ஆங்கிலத்தில் நான் எழுதிய ராமகிருஷ்ணன் அங்கிளோட கதைங்கள, வம்சி பதிப்பகம் புத்தகமா வெளியிட்டாங்க…" என்ற சைதன்யாவிடம்,

"குறிப்பா எந்தக் கதையோட எந்த வார்த்தையை ஆங்கிலத்துல எழுதுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டீங்க?"

"அரிசி எப்படிச் சோறாகிறதுன்னு ஒரு கதை. அதுல சோறுங்கிறதை ஆங்கிலத்துல எப்படி எழுதறதுன்னு தெரியல… ரொம்ப யோசிச்சு riceனே எழுதிட்டேன்" என்றார் கொஞ்சும் தமிழில் சைதன்யா.

சைதன்யாவின் இந்த மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி, நல்லி திசை எட்டும் விருதும் ஸ்டூடண்ட் இஸ்லாமிக் அமைப்பின் இளம் சாதனையாளர் விருதும் கிடைத்திருக்கின்றன. அடுத்து என்ன மொழிபெயர்க்கப் போறீங்க? என்ற கேள்விக்கு, சைதன்யா, அடுத்து ஒரு பொயட்ரி கலெக் ஷன் கொண்டு வரப்போறேன் என்கிறார்.

அதிலிருந்து ஒரு கவிதை சொல்லட்டுமா?

நான்தான் நிலா

நான் போவேன் உலா

எனக்குப் பார்க்க ஆசையாக

இருக்கிறது மானை

எனக்குக் குடிக்க ஆசையாக

இருக்கிறது தேனை

மனிதர்கள் இங்கே வருவார்கள்

அவர்கள் என் மேல் நடப்பார்கள்!

குட்டி கவிதாயினி உருவாகிவிட்டார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x