Last Updated : 11 Jan, 2017 11:04 AM

 

Published : 11 Jan 2017 11:04 AM
Last Updated : 11 Jan 2017 11:04 AM

மோர்ஸ் குறியீட்டில் உங்கள் பெயரை எழுதுவோமா?

குழந்தைகளே! ஜனவரி 11 அன்று ‘மோர்ஸ் குறியீட்டில் பெயரை எழுதக் கற்கும் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. அதென்ன மோர்ஸ் குறியீடு? அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். போய்விட்டு வருவோமா?

ரொம்ப தூரத்தில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, அத்தை, மாமாவை எப்படித் தொடர்புகொள்கிறீர்கள்? செல்போன் உதவியுடன் பேசுகிறீர்கள் அல்லவா? பேச முடியாத நேரத்தில் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? இப்போது ‘வாட்ஸ்அப்’ வந்துவிட்டது. இந்த வசதியெல்லாம் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் வந்தவைதான். அதற்கு முன்பு எப்படித் தொடர்புகொண்டார்கள் தெரியுமா? தந்தி மூலம்தான்!

பழங்கால உத்திகள்

அதற்கு முன்பு, பழங்காலத்தில் தூரத்தில் உள்ள ஒருவருக்குத் தகவலைச் சொல்ல ரொம்ப நாள்கூட ஆனது. தகவலைக் கொண்டு செல்பவர் நடந்தோ, ஓடியோ, குதிரை மீது சென்றோ கொடுத்துவிட்டுத் திரும்புவார். அப்புறம், பறவைகளுக்குப் பயிற்சி தந்து அவற்றின் காலில் கடிதம் கட்டி அனுப்பினார்கள். போர் போன்ற அவசர, ஆபத்து காலங்களில் இவையெல்லாம் உதவுமா? அதற்காக அப்போது, குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் பறை மற்றும் ஊதல் கருவிகளின் மூலம் அடுத்தடுத்து ஒலிகளை எழுப்பியோ, புகை மூட்டியோ தகவலைத் தெரிவித்தார்கள். காற்று, மழை போன்ற பருவ மாற்றங்கள் இந்தத் தகவல் தொடர்புகளை வெகுவாகப் பாதித்தன. எனவே புதிய தகவல் தொடர்புகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மோர்ஸ் உருவானது

18-ம் நூற்றாண்டில் பல புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வெளி வந்தவண்ணம் இருந்தன. மின்சாரம் மற்றும் காந்த சக்திகளின் பயன்பாடு புதிய கருவிகளை உருவாக்க உதவின. அடிக்கடி நடைபெற்ற போர்கள், தகவல் தொடர்பின் தேவையை ரொம்ப அதிகரித்தன. ரயில் பாதையில் சிக்னலுக்காக உருவாக்கப்பட்ட மின்காந்தத் தகவல் தொடர்பை அடிப்படையாக வைத்துப் பலர் பலவகையான ஆராய்ச்சிகளைச் செய்தார்கள்.

அப்போது அமெரிக்கரான சாமுவேல் மோர்ஸ் என்பவர் மின்காந்தக் கருவியிலிருந்து வயர்கள் வழியாகக் குறியீடுகளை அனுப்பும் முறைக்கு1837-ல் பிள்ளையார்சுழி போட்டார். அவருக்குப் பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் அவரது கண்டுபிடிப்பை இன்னும் மேம்படுத்தினார்கள். அந்தக் குறியீடுகள் மோர்ஸ் பெயராலேயே பின்னர் அழைக்கப்பட்டன. புள்ளிகள், சிறு கோடுகள் அவற்றின் இடைவெளிகள் வாயிலாகக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன.

ஆங்கில எழுத்துகள் மற்றும் எண் வரிசைகள் இந்த 2 குறியீடுகளுக்குள் கொண்டுவரப்பட்டன. உதாரணத்துக்கு உடனடி அவசர உதவிக்கு இன்றைக்கும் நாம் SOS என்ற எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? இதை மோர்ஸ் குறியீட்டில் ‘S’ எழுத்து 3 புள்ளிகளாலும், ‘O’ எழுத்து 3 சிறுகோடுகளாலும் குறிக்கப்படுகிறது. மோர்ஸ் குறியீடுகள் வந்த பிறகு, அதுவரையிலான போர்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி பரிமாற்றத்தின் போக்கையே மாற்றின. வான்வழி மற்றும் கடல் போக்குவரத்தில் மோர்ஸ் குறியீடுகள் பல ஆண்டுகள் முக்கியப் பங்கு வகித்தன.

‘தந்தி’ வந்ததும் போனதும்

தொடக்கத்தில் அரசு தகவல் தொடர்புகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருந்த மோர்ஸ் பயன்பாடு, டெலிகிராம் எனப்படும் ‘தந்தி’துரித சேவையாகப் பொதுமக்களுக்குப் பயன்பட ஆரம்பித்தது. உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டியிடம் அவர்கள் காலத்துத் தந்திகளைக் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு தந்திக்குப் பின்னாலும் ஒரு கதையைச் சொல்வார்கள்.

வெளியூரில் இருப்பவர் அங்குள்ள அஞ்சலகத்தில் தனது தகவலை எழுத்து வடிவில் கொடுப்பார். தனிப் பயிற்சி பெற்ற அஞ்சலக ஊழியர் அத்தகவலை மோர்ஸ் குறியீடாக மாற்றி, நமது ஊர் அஞ்சலகத்துக்கு அனுப்புவார். அங்கே குறியீடுகள் உரிய வார்த்தைகளாக மாற்றப்பட்டு, நமது வீட்டுக்கு வந்து சேரும்.

இன்றோ தொலைபேசியின் நவீன வளர்ச்சியும், இண்டர்நெட் பயன்பாடும் தகவல் தொடர்பை இன்னும் எளிமையாக்கிவிட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் தந்தி சேவை முடிவுக்கு வந்தது. நம் நாட்டில் 1850-ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம் அறிமுகமான தந்தி சேவையை, சுதந்திர இந்தியாவில் அஞ்சல் துறையும், தொடர்ந்து பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கி வந்தன. இச்சேவை 2013-ம் ஆண்டு ஜூலை 15 அன்று நிறுத்தப்பட்டது.

மோர்ஸில் பெயர் எழுதுவோம்

இன்று தகவல் தொடர்பு எவ்வளவோ வளர்ந்துவிட்டது. என்றாலும் அவற்றின் முன்னோடியான மோர்ஸ் தந்த தந்தியை மறக்க முடியுமா? குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும், பல்வேறு நாட்டுப் பள்ளிகளில் மோர்ஸ் குறியீட்டில் இன்று (11-ம் தேதி) ஒன்றிரண்டு வார்த்தைகளை எழுத மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இதற்காகவே ஆண்டுதோறும் ஜனவரி 11 அன்று ‘மோர்ஸ் குறியீட்டில் பெயரெழுத கற்கும் தினம்’ பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

மேலே தரப்பட்டுள்ள பட்டியல் உதவியுடன் நீங்களும் உங்களது பெயரை ஆங்கில எழுத்துக்கு உரிய மோர்ஸ் குறியீடு கொண்டு எழுதிப் பாருங்கள். உங்களது அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தகட்ட தகவல் தொடர்பு சாதனத்தை உருவாக்கப்போகும் விஞ்ஞானி நீங்களாகவும் இருக்கலாம் அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x