

தாய்லாந்தில் சில மாதங்களுக்கு முன் தெருவில் ஆமை ஒன்று மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அதன்மீது ஏறிவிட்டது. அந்த ஆமை நிச்சயம் இறந்து விட்டது என்றே எல்லோரும் முடிவெடுத்தார்கள். ஆனால், அங்கிருந்த விலங்குநலக் கூட்டமைப்பு உடனடியாகச் செயல்பட்டு அந்த ஆமையின் உயிரைக் காப்பாற்றிவிட்டது.
நாளிதழில் இது ஒரு முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது. அந்த ஆமையைக் காண மருத்துவமனைக்கு பலரும் வந்தார்கள். ‘ஜிக்கோ’ என்று அந்த ஆமைக்குப் பெயரிடப்பட்டது. ‘பாங்காக் போஸ்ட்’ என்ற நாளிதழ் தினமும் தனது பெட்டிச் செய்தியில் ஜிக்கோவின் உடல்நல முன்னேற்றம் பற்றித் தகவல் வெளியிட்டது.
என்னதான் உறுதியான மேல் ஒடு என்றாலும், லாரி ஏறினால் தாங்குமா? ஜிக்கோவின் மேல் ஓடு உடைந்துவிட்டது. அதற்கு ஃபைபர் கிளாஸில் ஒரு ஓடு செய்து மருத்துவர்கள் பொருத்தி யிருக்கிறார்கள். உலகிலேயே ஃபைபர் கிளாஸ் ஓடு கொண்ட ஆமை ஜிக்கோ மட்டும்தான்.
மருத்துவர் நான்தரிகா என்பவரின் பங்கு இதில் முக்கியமானது. “இருபது வயதான ஜிக்கோவின் உடல் உறுப்புகளில் பலவும் சிதைந்திருந்தன. சிகிச்சையின்போது அது தொடர்ந்து அழுதது. இப்போது அது என் குரலை கண்டுகொள்கிறது. எங்கிருந்து கூப்பிட்டாலும் என்னைத் திரும்பிப் பார்க்கும்” என்கிறார்.
இப்போது ஆமை குணமாகிவிட்டது. இனி, அந்தச் செயற்கை ஓடுதான் அதற்கு நிரந்தரமா? இல்லை மீண்டும் இயற்கையான ஓடு அதன்மீது கொஞ்சம் கொஞ்சமாக வளரும். அப்போது ஃபைபர் கிளாஸ் ஓடு தானாகவே உடைந்துவிடும்.
ஆமைகள் பல கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியவை. சொல்லப் போனால் டைனசார்களுக்கு முன்பே வாழ்ந்தவை. இதன் மேல் ஓடு தொடர் எலும்புத் தகடுகளால் ஆனது. அதற்கும் மேல் கொம்புகளாலான ஒரு படலமும் உண்டு. இதன் ஓடு மிகவும் வலிமையானது என்று சொல்லப்பட்டாலும், அது மிகவும் நுட்பமானதும்கூட. அந்த ஓட்டை லேசாக தொட்டால்கூட ஆமையால் அதை உணர்ந்து கொள்ள முடியும். காரணம், அந்த ஓட்டின் இடையே நிறைய நரம்புகள் உள்ளன.
ஆமை போன்ற விலங்குகள் தங்கள் ஓடுகளை கழற்றி வைத்துவிட்டு இயங்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்காத காரியம். ஏனென்றால் ஆமையின் பல எலும்புகள் அந்த ஓட்டின் உட்பகுதியோடு அழுத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.
ஆமை தொடர்பான இன்னொரு செய்தி. இது நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. கனடாவில் உள்ள டொரான்டோ விலங்கியல் மையத்திலிருநது மருத்துவர்களுக்கு ஓர் அவசரச் செய்தி வந்தது. “வடேர் என்று பெயரிடப்பட்ட ஓர் ஆமையின் வாலிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு கண்ணைக் காணோம். இன்னொரு கண் காடராக்ட் காரணமாகப் பார்வை தெரியாமல் இருக்கிறது. உதவுங்கள்”.
ஆமைக்கு யாரும் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்ததில்லை. என்றாலும் டாக்டர் ஜோசப் வோல்ஃபர் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.