

l இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், இந்தியாவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்காரர். 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் நார்மன் பிரிட்சர்ட் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
l நம் நாட்டின் சார்பில் தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கஷாபா ஜாதவ். 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார்.
l இந்தியா சார்பில் தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆந்திரத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி. 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார். அந்த ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான பளுதூக்கும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
l இந்தியா சார்பில் தனிநபராகத் தங்கம் வென்ற முதல் வீரர் பஞ்சாபைச் சேர்ந்த அபிநவ் பிந்த்ரா. 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மூலம் இந்தச் சாதனையை அவர் புரிந்தார். ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்கும் அவர், ஒலிம்பிக் பேரணியில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தைப் பெற்றிருக்கிறார்.
l நார்மன் பிரிட்சர்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற தனிநபர் இந்தியர், டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அவர் பங்கேற்கவில்லை.
கல்வியாளரின் ஒலிம்பிக் கனவு
பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் உறைந்துவிட்ட 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபிரெஞ்சு கல்வியாளர் பியர் தெ குபர்தென் அந்தப் போட்டிகளை மீட்டெடுப்பதற்கான உத்வேகத்துடன் இருந்தார். இதற்காக யு.எஸ்.எஃப்.எஸ்.ஏ. என்ற ஒரு புதிய விளையாட்டு அமைப்பை 1890-ல் அவர் நிறுவினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பாரிஸில் நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்தும் யோசனையை அவர் முன்வைத்தபோது, பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. மனம் தளர்ந்துவிடாத அவர், தொடர்ந்து ஒலிம்பிக் பற்றி வலியுறுத்திவந்தார். 1894-ல் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 74 பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை அவர் கூட்டினார். அந்த முறை ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றி அவர் பேசியபோது, ஆர்வத்துடன் பலரும் வரவேற்றார்கள்.
உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஒரு சர்வதேசக் குழுவைக் குபர்தென் உருவாக்குவதற்கு அந்தக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் குழுதான் ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி’. அதன் முதல் தலைவராக கிரீஸைச் சேர்ந்த டெமெட்ரியாஸ் விகிலாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன ஒலிம்பிக்கை அரங்கேற்றும் இடமாக கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் தேர்வு செய்யப்பட்டது. ஏதென்ஸில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896-ல் நடந்தபோது, குபர்தெனின் கனவு நனவானது. 120 ஆண்டுகளாக அந்தப் பாரம்பரியம் வெற்றிகரமாகத் தொடர்ந்துவருகிறது.
l நார்மன் பிரிட்சர்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற தனிநபர் இந்தியர், டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அவர் பங்கேற்கவில்லை.
l 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவிலேயே அதிகமாக ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், ஏழாவது முறையாக இந்த முறையும் ரியோ சென்றுள்ளார்.
l 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ராதோட், துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
l 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் சுஷில் குமார் (மல்யுத்தம்), விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை) ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
l இதுவரை பங்கேற்றதிலேயே அதிக ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா கடந்த முறைதான் வென்றது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் குமார் (மல்யுத்தம்), விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்) ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கமும், மேரி கோம் (குத்துச்சண்டை), சானியா நேவால் (பாட்மின்டன்), ககன் நாரங் (துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பதக்கங்களை அள்ளிச் சென்றவர்கள்
ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற பெண் பழைய ரஷ்யாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸா லாட்டினினா. 1956, 1960, 1964 ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார். மொத்தம் 18 பதக்கங்கள்.
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் அதிகப் பதக்கங்களை வென்ற ஆண் சாதனையாளர். 2004-2012 வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 22 பதக்கங்களை (18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) அவர் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பங்கேற்கிறார் என்பதால், அவருடைய சாதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.
விநோதச் சாதனை
குதிரை செலுத்திய பாட்டி
கோடை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களிலேயே முதியவர், பெண் குதிரையேற்ற வீராங்கனை ஹில்டா எல். ஜான்ஸ்டோன். 1972 மியூனிக் விளையாட்டுப் போட்டிகளில் டிரெஸ்ஸேஜ் பிரிவில் பங்கேற்றபோது அவருடைய வயது 69.
2016 ஒலிம்பிக்கில்... விளையாட்டு காட்டும் வினிசியஸ்
ரியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளின் அதிகாரபூர்வச் சின்னம் பிரேசில் நாட்டுப் பாலூட்டிகளைப் போன்ற தோற்றம் கொண்ட வினிசியஸ் என்ற உயிரின ஜோடி. பிரேசில் பண்பாடு, மக்களைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தச் சின்னங்கள் அமைந்துள்ளன. ‘வினிசியஸ் தெ மொரஸ்’ என்ற பிரபல பிரேசில் கவிஞரின் பெயரிலிருந்து உத்வேகம் பெற்று இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.