Published : 07 Jun 2017 10:20 AM
Last Updated : 07 Jun 2017 10:20 AM

காரணம் ஆயிரம்: இந்த நீர் கரடியைத் தெரியுமா?

நம்மால் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழ முடியுமா? முடியவே முடியாது. கோடை காலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், ஒரு உயிரி 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மிகச் சாதாரணமாக வாழ்கிறது. அது என்ன உயிரி?

நம்மால் ஜீரோ டிகிரி செல்சியஸுக்குக் கீழ் உள்ள குளிரைத் தாக்கு பிடிக்க முடியுமா? முடியவே முடியாது. உறைந்து போய்விடுவோம். ஆனால், ஒரு உயிரி மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குட்டிக்கரணம் போட்டு விளையாடுகிறது. இது எந்த உயிரி?

அணு உலைக் கழிவு விபத்து ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? பத்து யூனிட் கதிரியக்கம் உடலில் பட்டாலே மரணம்தான். ஆனால், ஒரு உயிரி 5,000 யூனிட் கதிரியக்கத்தைக்கூட அசால்ட்டாக கடந்துசெல்கிறது. இது என்ன உயிரி?

வான் வெளியில் காற்றே இல்லாத இடத்தில் நம்மைக் கொண்டு போய் விட்டால் என்ன ஆகும்? சிறகடித்துப் பறக்க முடியுமா? சிறகொடிந்து விழுந்து விடுவோம். ஆனால் ஒரு உயிரி வான் வெளியில் காற்றே இல்லாத இடத்தில் பத்து நாட்கள் பயணம் செய்துவிட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டது. அட அப்படியா! இது என்ன உயிரி?

இது எல்லாமே ஒரே உயிரிதான், அதன் பெயர் நீர்க்கரடி. செல்லமாக ‘பாசி பன்றிக்குட்டி’ என்று சொல்வார்கள். உடனே அந்த உயிரியைப் பார்க்க வேண்டும் என்று ஆசையா? அப்படியெல்லாம் உடனே பார்க்க முடியாது. ஏனென்றால் அது ஒரு நுண்ணுயிரி. மைக்ரோஸ்கோப் உதவியுடன்தான் அந்த நீர்க்கரடியைப் பார்க்க முடியும். அரை மில்லி மீட்டர் அளவுக்குத்தான் வளரும். விதி விலக்காகச் சில நீர்க்கரடிகள் ஒன்றரை மில்லி மீட்டர் வரைகூட வளரும். அப்போதும் அதை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

1773-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு விலங்கியல் அறிஞர் ஜோகன் ஆகஸ்ட் என்பவர் இந்த உயிரியைக் கண்டுபிடித்தார். 3 ஆண்டு கழித்து இத்தாலிய நாட்டைச் சேர்ந்த விலங்கியல் அறிஞர் ‘லாசரே ஸ்பால்லன்ஸானி’ இது நடந்து வருகிற அழகைப் பார்த்துவிட்டு இதற்கு ‘டார்டி கிரேட்’ (tardi grade) என்று பெயர் சூட்டினார். டார்டி கிரேட் என்றால் மெல்ல நடப்பவர் என்று அர்த்தம்

வெயில், மழை, பனி, புயல் மட்டுமல்ல தகிக்கும் எரிமலைகள், பனிபடர்ந்த மலைகள், ஆழ்கடல்கள், காற்றே இல்லா வான்வெளி என எல்லா இடங்களிலும் வாழும் தகவமைப்பை பெற்றது இந்த நீர்க்கரடி. உலகம் முழுவதும் இந்த நீர்க்கரடிகள் காணப்படுகின்றன. நம் நாட்டின் இமயமலையில் 6,000 மீட்டர் உயரத்தில் பனி உறைந்த பிரதேசத்தில் இவற்றால் நிம்மதியாக வாழ முடிகிறது.

இதே போல் ஆழ்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன. ஒரு முறை ஓர் ஆராய்ச்சிக்காகச் சில நீர்க்கரடிகள் வான் வெளியில் வைத்துப் பார்த்தார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நீர்க்கரடிகளைப் பூமிக்கு எடுத்து வந்தபோது ஒரு நீர்க்கரடி கூட சாகவில்லை. இதனால்தான் இதற்கு ‘வான் கரடி’ என்ற பெயரும் வந்தது. இவற்றுக்கு 8 கால்கள், ஒவ்வொரு கால்களிலும் நான்கு முதல் எட்டு நகங்கள் வரை இருக்கும். இந்தக் கால்களைக் கொண்டு இது நடந்து வரும் காட்சி கரடி நடப்பது போலவே இருக்கும். அதனால்தான் பெயருடன் கரடியையும் ஒட்ட வைத்துவிட்டார்கள்.

இதன் சுவாசத்துக்கெனத் தனி உறுப்புகள் எதுவும் இல்லை. தன் உடல் அமைப்பு முறையையே இது சுவாசத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதன் உடலின் சில பகுதிகளில் உள்ள ரத்தக் குழிகளைப் பயன்படுத்திச் சுவாசம் எடுத்துக்கொள்கிறது. தன் உடம்பில் உள்ள நீரைப் பயன்படுத்தித் தன் உடலை விரிவடையவும் சுருங்கவும் செய்கிறது. பாசிகள் மீதும், சிறு சிறு நுண்ணுயிரிகள் மீதும் தன் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்தைப் பரப்பி அதனை உணவாக்கிக் கொள்கிறது (இதனால் பாசி பன்றிக்குட்டி என்றும் அழைக்கிறார்கள்). உணவும் தண்ணீரும் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை இவற்றால் உயிர்வாழ முடியும். நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போதுதான் அது மரணத்தைத் தழுவுகிறது.

எல்லாம் சரி, அது எப்படி எரிமலை, பனி பிரதேசங்கள் என எல்லா இடங்களிலும் வாழ முடிகிறது? உண்மையில் அறிவியல் அதிசயம்தான் இது.

அதிக வெப்பமான காலங்களில் இதன் உடலில் நீர்ச்சத்து 3 சதவீதத்துக்குக் கீழ் குறைந்துவிடும். அப்போதுகூட சுற்றுப் புறத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுக்கொள்ளும் அளவுக்கு இதன் செல்கள் சக்தி பெற்றிருக்கின்றன (நன்றாக வளர்ந்த நீர்க்கரடி யில் 40,000 செல்கள் வரை இருக்கும்). இந்த நீர்ச்சத்தைக் கொண்டு நீர்க்கரடிகள் மரணத்திலிருந்து தப்பி பிழைக்கின்றன.

கடும் வறட்சி, கடும் குளிர் என இரண்டு நிலைகளிலும் இது உயிர் வாழ மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. நீர்க்கரடிகள் உட்கொள்ளும் பூஞ்சைகளில் இருந்து இரட்டைச் சர்க்கரை கிடைக்கிறது. இந்த இரட்டைச் சர்க்கரை நீர்க்கரடிகளின் சவ்வுகளைப் பத்திரமாகப் பாதுகாக்கிறது.

இந்த டிரெஹெலோஸ் (trehalose) இரட்டைச் சர்க்கரை உயிரினங்களில் மிக அரிதான விஷயம். நீர்க்கரடிகளில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். கதிரியக்கத்திலிருந்து நீர்க்கரடிகளைக் காப்பாற்றுவது அதன் மரபணு. நீர்க்கரடியின் மரபணுவில் மட்டும் டி-சப் (D SUP) என்ற விசேஷப் புரோட்டீன் உள்ளது. இந்தப் புரோட்டீன்தான் கதிரியக்கத்திலிருந்து கரடியைக் காப்பாற்றும் காவலன்.

என்ன ஒரு வித்தியாசமான உயிரி!

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x