

அக்டோபர் 16, 1968. நிறவெறி எவ்வளவு கொடுமையானது? பெற்ற வெற்றியை கொண்டாட ஆளில்லாமல் மனிதனாக நடத்தபடாமல் போவது எவ்வளவு வலியானது என உலகிற்கு ஒலிம்பிக்கில் இரண்டு வீரர்கள் அன்றைய தினம் உணர்த்தினார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை இருநூறு மீட்டர் தூரத்தில் பதக்கம் பெற்ற ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் இருவரும் முறையே தங்கள் வலது மற்றும் இடது கையில் கருப்பு உறை அணிந்து, அமெரிக்க தேசிய கீதம் பாடும்போது தலை குனிந்து நின்றார்கள்.
“எங்கள் தேசத்தில் நாங்கள் வென்றால் அமெரிக்கர்கள்; தோற்றால் நீக்ரோக்கள் என திட்டுவார்கள்... வலது கையில் இருக்கும் உறை கருப்பின ஆற்றலையும், இடது கையில் இருந்த உறை கருப்பின விடுதலையையும் வலியுறுத்தியது” என்றார்கள். மேலும் கருப்பின மக்களின் வறுமையை குறிக்க காலில் ஷு இல்லாமல் நின்றார்கள். இதை ஒலிம்பிக்கின் அவமானம் என சொல்லி அவர்களை அந்த கிராமத்தை விட்டே ஒலிம்பிக் கமிட்டி வெளியேற்றியது.
கருப்பின மக்கள் எங்களைப் புரிந்துகொள்வார்கள் என்றார்கள். அப்படித்தான் ஆனது. முப்பது வருடங்கள் கழித்து கருப்பின மக்களின் உரிமைக்கு போராடியதற்காக கெளரவிக்கப்பட்டார்கள். இன்றும் அவர்களின் சிலை கம்பீரமாக சுதந்திரத்தின் வேட்கையை பறைசாற்றி நிற்கிறது.
ஜெஸ்ஸி ஓவன்ஸ் எனும் மாபெரும் தடகள வீரனையும், அமெரிக்காவில் நிறம் படாத பாடு படுத்தியது. தன் நாஜி இனமே உயரியது என அறிவித்துக்கொண்டு ஹிட்லர் நடத்திய பெர்லின் ஒலிம்பிக்ஸில் நான்கு தங்கப் பதக்கங்களை அள்ளிய நாயகன் அவர். அவரின் அப்பாவின் பெயரின்படி அவர் பெயர் ஜே.சி. என இருந்திருக்க வேண்டும். வகுப்பாசிரியை காதில் தவறாக, அது ஜெஸ்ஸி என விழுந்து, அதுவே பெயரானது.
இந்த ஒலிம்பிக் சாதனையை படைப்பதற்கு ஒரு வருடம் முன்னர்தான் பிறர் உதவி இல்லாமல் ஆடையே அணிய முடியாத நிலையில் இருந்து மீண்டெழுந்து, ஐந்து உலக சாதனைகளை நாற்பத்தைந்து நிமிடங்களில் நிகழ்த்தினார். ஆனாலும் அவரின் வெற்றியின்போது கருப்பினத்தில் பிறந்ததால் அவருடன் கைகுலுக்க ஹிட்லர் மறுத்துவிட்டார். அமெரிக்காவில் அவரை யாரும் சரியாக வரவேற்கக்கூட இல்லை. “என் நாட்டில் பேருந்தில் முன்பக்கம் போகமுடியவில்லை; பின் கதவின் வழியாகத்தான் ஏறுகிறேன்!நினைத்த இடத்தில் வாழ முடியவில்லை. என்ன தேசம் இது?” என வருத்தப்பட்டார். அவரை நாடு கண்டுகொள்ளவே இல்லை. ஒரு காலம் வரை கார், ஜீப் உடன் போட்டி போட்டு ஓட்டி வருமானம் ஈட்டினார். ஆனால், பின் ஒரு பிரபலமான ஊக்குவிப்பாளராக வெற்றிபெற்றுக் காட்டினார்.
லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்து பசியோடு போராடிய தருணங்களை மிஞ்சி ஜெயித்த நிஜநாயகனை காலம் கடந்து அமெரிக்க கெளரவித்தது. அவர் இறுதியில் புற்றுநோயுடன் உடன் போராடி இறந்து போனார். “எங்கள் தலைக்கு மேலிருந்த கூரைகளை எடுத்து விட்டோம், வானமே எல்லை!” என நம்பிக்கை பொங்க சொன்ன அவரை, தக்க காலத்தில் நிறத்தால் வேறுபடுத்திய கொடுமையை வரலாறு மறக்காது.
காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த முகமது அலி பிறப்பால் அமெரிக்க ஆப்பிரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர். க்ளேவாக குத்துச்சண்டைக் களத்துக்குள் புகுந்த இவர், அங்கே பெற்றதெல்லாம் வெற்றி, வெற்றிதான். தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர், ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறு உண்டு. இரண்டு முறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்த இவருக்கு ஒரு சோதனை வந்தது. சரியாகச் சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம்.
இவர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்கக்கூட ஆளில்லை. நிறவெறி - வெய்ட்டர்கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்தப் பதக்கத்தை நதியில் வீசிவிட்டு நடந்தார். இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரை முகமது அலி என அழைக்க, எதிர் போட்டியாளர் மறுத்துவிட்டார். கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும், உலக சாம்பியன் ஆனார். வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்து, அதில் இவரையும் சேரச் சொன்னது. “அப்பாவி மக்களை கொல்லும் போரில் கலந்துகொள்ள மாட்டேன்!”என இவர் சொன்னது பெரிய அலையை ஏற்படுத்தியது,
காத்திருந்த அமெரிக்க அரசு, அவரை குத்துச்சண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது. மூன்று வருடம் வனவாசம். பின் பல்வேறு போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்தால், தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப் போனார். அவ்வளவுதான் என நாடே நகைத்தது. அப்பொழுதுதான் உலக சாம்பியன்ஷிப் வந்தது. ஒரே ஒருவரைத் தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை. மூன்று வருட வனவாசம் வேறு ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி!
அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது. பார்கின்சன் சிண்ட்ரோம் அவரை பாதித்து முடக்கிபோட்டது. ஆனாலும், அவர் பல்வேறு நிதி திரட்டல்கள் மூலம் எளியவர்களுக்கு உதவிவந்தார். அவருக்குச் செய்த அவமானங்களுக்கு பிராயச்சித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள்.
“என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது. இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன்!” என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை. விளையாட்டுக்கும் நிறமுண்டு. அதன் பெயர் நம்பிக்கை.