

கொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லவே எல்லோருக்கும் பயம் வந்துவிடும். ஆனாலும், கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவதில் சிறுவர்களுக்கு ரொம்ப பிரியம்தான். அப்படி வெயிலில் விளையாடும்போது தலையில் தொப்பி அணியவும் அவர்கள் மறக்க மாட்டார்கள். வெயிலிலிருந்து காக்க உதவும் தொப்பி எப்படி உருவானது?
காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதன் வெயில், பனி, குளிரிலிலிருந்து காத்துக்கொள்ளத் தலையையும் கழுத்தையும் மறைத்துக்கொண்டான். இதற்காக, அகன்ற தாவர இலைகள், தழைகளோடு கூடிய சிறு கிளைகளைக் கட்டிக்கொண்டான். பிற்கு மரப்பட்டைகளைப் பயன் படுத்தினான். கொஞ்சம் நாகரிகம் வளர்ந்த பிறகு காட்டு விலங்குகளை வேட்டையாடி, மாமிசத்தைச் சாப்பிட்ட ஆதி மனிதர்கள், அவற்றின் தோலைத் தலையில் அணிந்து வெயில், குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.
இப்படி உருவான தோல் அணிகலன்தான் தொப்பி உருவாக அடிப்படையாக அமைந்தது. காலப் போக்கில் மனிதர்களின் நாகரிக வளர்ச்சியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எகிப்து, கிரேக்கம், ரோம் மக்கள்தான் கம்பளித் தொப்பிகள் பயன்படுத்தக் காரணமாக இருந்தார்கள். 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கரடுமுரடான பருத்தி நூல்கள், துணி, பட்டுத் துணியாலான விதவிதமான தொப்பிகள் செய்யப்பட்டன. இது பல நாடுகளுக்கும் பரவியது.
கிபி 1300 முதல் தொப்பி களில் கண்கவர் அலங்காரம் வழக்க மாகியது. மத அடையாளமாகவும் பலவகைத் தொப்பிகள் உருவாகின. கி.பி 1350 முதல் 1400 வரை மேற்கு ஐரோப்பியப் பெண்கள் டர்பன் போன்ற தொப்பிகளை அணிந்தார்கள். கி.பி 1600-ம் ஆண்டில் மேற்கு ஆசியாவில் மக்கள் விளிம்பில்லாத சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தார்கள். அரேபியர்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஏற்பத் தொப்பிகளில் உயர்ந்த நகைகளை பதித்துக்கொண்டார்கள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொப்பிகள் உருவாயின. இன்று மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும் தொப்பிகளுக்கெல்லாம் இந்தத் தொப்பிகள்தான் முன்னோடிகள்.
தகவல் திரட்டியவர்: எஸ். செம்பருத்தி, 8-ம் வகுப்பு,
ஊராட்சி நடுநிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.