காலண்டரால் காணாமல் போன நாட்கள்

காலண்டரால் காணாமல் போன நாட்கள்
Updated on
2 min read

செப்டம்பர் 8-ம் தேதி உங்களுக்கு பிறந்த நாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். கொண்டாட்ட ஆசைகளுடன் செப்டம்பர் 7-ம் நாள் இரவு உறங்கி அடுத்த நாள் காலை உற்சாகமாக எழுந்திருக்கிறீர்கள். அப்பா உங்களிடம் வந்து ‘இன்று செப்டம்பர் 27-ம் தேதி என்று அரசாங்கம் அறிவித்துவிட்டது’ என்று சொல்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? பிறந்த நாள் பறிபோனதோடு தலை கிர்ர்ரென்று சுற்றும் இல்லையா? இதுபோன்ற சுவாரசிய நிகழ்வுகளை கொண்ட வரலாற்றின் பின்னணியில்தான், நாம் தற்போது பயன்படுத்தும் காலண்டர் நடைமுறைக்கு வந்த கதை இருக்கிறது.

ரோம் நாட்டு அரசரான ஜுலியஸ் சீஸர் காலத்தில் காலண்டர் கணிப்புகள் முறைப்படுத்தப்பட்டன. அந்த மன்னர் பெயரில் அப்போது உருவான ஜுலியன் காலண்டரே 14-ம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்தது. ரோம் கத்தோலிக்க மத குருவான போப் 13-ம் கிரிகோரி காலத்தில் ஜுலியன் காலண்டர் திருத்தப்பட்டது. ஈஸ்டர் பண்டிகை, ஜனவரி 1 புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. வானவியல் மற்றும் கணித அறிஞர்கள் இதை மேற்கொண்டனர். போப் உத்தரவினால் உருவான புதிய காலண்டர், அவரது நினைவாக கிரிகோரியன் காலண்டர் எனப்படுகிறது.

புதிய மாற்றங்களால் ஜூலியன் காலண்டருடன் ஒப்பிடப்பட்டு, கிரிகோரியன் காலண்டரில் நாள் கணக்கில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி 1582 அக்டோபர் 5-ம் தேதியின் அடுத்த நாள் அக்டோபர் 15 என்றானது. அக்காலத்தில் பொதுமக்களின் முக்கிய தொழிலான விவசாயம் மேற்கொள்வதற்கு சூரியன், சந்திரன், விண்மீன் மற்றும் பருவ மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே காலத்தை கணித்து வந்தார்கள். இதனால் புதிய காலண்டர் மாற்றம் பொதுமக்களைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

பாபிலோன், எகிப்து, சீனம், ஹீப்ரூ என நாகரிகங்கள் தோன்றியதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தனி காலண்டர்கள் நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. என்றாலும் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட கத்தோலிக்க நாடுகளைத் தவிர்த்து பிற இடங்களில் இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை.

170 ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் அரசு பிரிட்டனிலும், தனது அமெரிக்க காலனி பகுதிகளிலும் இந்தத் திருத்தத்தை அமல்படுத்தியது. இதற்காகத் தனி சட்டம் இயற்றியது. 1752 செப்டம்பர் 2-ம் நாள் இரவு உறங்கி, அடுத்த நாள் காலையில் கண்விழித்தவர்களை செப்டம்பர் 12 வரவேற்றது. அப்போது காலண்டர் உபயோகம் பரவலாகி இருந்ததால், பறிபோன 10 நாட்களை திரும்ப வழங்கக்கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடியதும் நடந்ததாம். இந்தப் போராட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது.

பின்னர் 1873-ல் ஜப்பான், 1918-ல் ரஷ்யா, 1924-ல் கிரீஸ் என அடுத்தடுத்த நாடுகளில் கிரிகோரியன் காலண்டர் பரவலாக நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்ததால் நம் நாடு கிரிகோரியன் வழக்கத்திற்கு வந்தது. உலகளாவிய வணிகம், பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் தற்போது பொதுவான காலண்டராக கிரிகோரியனே பயன்பாட்டில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in