

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் அரவிந்த் ஸ்ரீகாந்த் (12) கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கில் ஓட்டியபடி பிரச்சாரம் செய்தார்.
“வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள், காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுங்கள், ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டுங்கள்” குரல் எழுப்பியபடி 7 கி.மீ தொலைவை 16 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து உலக சாதனைக்கான முயற்சியும் செய்துள்ளார். ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் பயணத்தை துவங்கி நான்கு சித்திரை வீதிகளை இரண்டு முறை சுற்றி வந்து இந்த சாதனை முயற்சியை செய்து முடித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி ரஜினி ரசிகர்கள் செய்திருந்தனர்.