

பறவைகளையும் விலங்குகளையும் பிடிக்காத குழந்தைகளே இல்லை. குழந்தைகள் நடக்கத் தொடங்கியதுமே பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டும், நாய்க்குட்டியைக் கொஞ்சிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் பிரபுவுக்குப் பறவைகளைக் கண்டாலே பிடிக்காது. ஏன்? தினமும் காலையில் சத்தம் போட்டு அவன் தூக்கத்தைக் கெடுத்தால் அவனுக்கு எப்படிப் பிடிக்கும்?
தன் தூக்கத்தைக் கெடுக்கிற பறவைகளை அவன் வெறுக்கிறான். ஆனால் அந்தப் பறவைகளே நண்பர்களாக மாறின. எப்படி?
அதுதான் ‘மனதுக்கு இனிய பறவை’என்னும் கதை.
பிமலேந்திர சக்ரவர்த்தி எழுதியிருக்கும் இந்தக் கதை ஒரு சிறுவனின் மன மாற்றத்தை அழகாக விவரிக்கிறது. கதையைப் போலவே சமரேஷ் சாட்டர்ஜியின் ஓவியங்களும் மனம் கவர்கின்றன.
சுருட்டை முடியும் அரை
டிராயருமாக ஓடி வரும் பிரபு,
அவன் காலைச் சுற்றிவரும் பூனை, தலைக்கு மேல் பறக்கும் பறவைகள், வீட்டுத் தோட்டத்தில் இருக்கும்
மரங்கள், கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் மைனா, பூக்களைச் சுற்றிவரும்
தேனீக்கள் என்று ஓவியங்களே பாதி கதையைச் சொல்லிவிடுகின்றன.
இந்தக் கதையைப் படிக்க அம்மா, அப்பா என்று பெரியவர்களின் துணை எதுவும் வேண்டாம். குழந்தைகளே படித்துப் புரிந்துகொள்ளலாம். அவ்வளவு எளிய நடையில் இருக்கிறது கதை.
கடைசியில் ‘மாரல் ஆஃப் த ஸ்டோரி’ என்று ஏதாவது புத்தி சொல்வார்கள் என்று நினைக்காதீர்கள். இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடையாது. ஜாலியாகப் படிக்கலாம். சிறுவனின் போக்கிலேயே கதை நகர்கிறது. அவனுக்குள் ஏற்படும் மாற்றத்தை நமக்குள்ளும் ஏற்படுத்துகிறது.
படித்து முடித்ததும் பிரபுவைப் போலவே நீங்களும் பறவைகளை நேசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.
புத்தகம் : மனதுக்கு இனிய பறவை
ஆசிரியர் : பிமலேந்திர சக்ரவர்த்தி
தமிழாக்கம் : என். லதா
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.