குழந்தைப் பாடல்: இளநீர்

குழந்தைப் பாடல்: இளநீர்
Updated on
1 min read

இயற்கை என்றும் நமக்குப்

பரிசாய்த் தந்திடும் நீராம்

தென்னை மரத்தில் காய்க்கின்ற

இளநீர் அதன் பேராம்!

செயற்கை சிறிதும் இல்லை

எனவே தீங்கும் இல்லை

பெரியவர் குழந்தை யாவரும்

குடிக்கத் தகுந்த நீராம்!

ஓடி ஆடி விளையாடி

களைத்து நாமும் வந்தால்

குடித்த உடன் களைப்பினைப்

போக்கும் நல்ல நீராம்!

அருந்திட தாகம் தணியும்

உடலில் குளிர்ச்சி தோன்றும்

நீரின் அளவு நம் உடலில்

குறையாமல் அது காக்கும்!

வெப்பத்தாலே தோன்றும்

நோய்கள் வராமல் தடுக்கும்

எலும்புகள் உறுதி பெற்றிடவே

சத்தும் நமக்குக் கொடுக்கும்!

கோடை காலம் கடுமையாய்க்

கொளுத்துகின்ற வெயிலுக்கு

இளநீர் பருகி நாமும்

உடலின் நலனைக் காப்போம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in