Last Updated : 07 Jun, 2017 10:20 AM

 

Published : 07 Jun 2017 10:20 AM
Last Updated : 07 Jun 2017 10:20 AM

தினுசு தினுசா விளையாட்டு: ஓடு… உட்காரு…!

“எனக்கு விளையாடவே பிடிக்காது” என்று சொல்லும் குழந்தைகள் யாராவது இருப்பார்களா? நிச்சயமாக இல்லையென்றே சொல்லலாம்.

ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவர் ரசனைக்கேற்பவும், அவரது உடல்நிலைக்கேற்பவும் சில விளையாட்டுகள் பிடிக்கும். சில விளையாட்டுகள் பிடிக்காது. குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது, பல குழந்தைகள் எந்த விளையாட்டை விளையாட வேண்டுமென்று முடிவெடுக்கிறார்களோ அதைத்தான் எல்லாக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள். பெருவாரியானவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்கும் இந்த ஜனநாயகம் குழந்தைகளின் விளையாட்டிலும் உண்டு.

சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு ‘ஓடு..! உட்காரு..!’.

எப்படி விளையாடுவது..?

1. இரு பால் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. 30 முதல் 40 குழந்தைகள் வரை ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம்.

2. முதலில் விளையாட்டில் பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளையும் ‘சாட்… பூட்… திரி…’ போடச் சொல்லுங்கள். சம எண்ணிக்கையில் 4 அல்லது 5 குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள் (ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சமாக 8 பேர்வரை இருக்கலாம்).

3. எல்லோரும் ஒரு நேர்க்கோட்டின் முன்பாக, ஒருவர் பின் ஒருவராகக் குழு வாரியாக நின்றுகொள்ளுங்கள். ஒவ்வொரு குழுவுக்கும் எதிரே 30 அடி தொலைவில் சிறிய வட்டத்தை வரையுங்கள். இப்போது எல்லாரும் தயார்தானே… விளையாட்டைத் தொடங்கலாமா?

4. யாராவது ஒருவர் ‘ரெடி’ என்று குரல் கொடுத்ததும், அனைத்துக் குழுவிலும் முதலாவதாக நிற்பவர் வேகமாக ஓடி, எதிரேயுள்ள வட்டத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். உட்கார்ந்த வேகத்திலேயே சட்டென எழுந்து, மறுபடியும் குழுவை நோக்கி வேகமாக ஓடி வாருங்கள்.

5. குழுவின் அருகே வந்ததும், வரிசையில் அடுத்ததாக நிற்பவரைத் தொட்டுவிட்டு, குழுவின் வரிசையில் கடைசி ஆளாகச் சென்று நின்றுகொள்ளுங்கள்.

6. முதலாவதாக ஓடியவர் யாரைத் தொட்டரோ, அவர் வேகமாக முன்னே ஓடிச் சென்று, வட்டத்தில் உட்காருங்கள். பிறகு, உடனே எழுந்து ஓடிவந்து, வரிசையில் அடுத்ததாக நிற்பவரைத் தொட்டுவிட்டு, வரிசையின் கடைசியில் போய் நின்றுகொள்ளுங்கள்.

இப்படியாக, குழுவிலுள்ள அனைவரும் ஓடிச்சென்று, வட்டத்தில் உட்கார்ந்து விட்டுத் திரும்பி வர வேண்டும்.

7. இதில், எந்தக் குழுவிலுள்ள அனைவரும் வட்டத்தில் உட்கார்ந்துவிட்டு, திரும்பி வந்து வரிசையில் நிற்கிறார்களோ, அந்தக் குழுவே முதலிடத்தைப் பிடிக்கும். பிறகு வரும் குழுக்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும்.

8. விளையாடத் தொடங்கிய கணத்திலிருந்து, வெற்றி பெறும்வரை சற்றும் சோர்வில்லாமல் பரபரப்பாக விளையாடும் இந்த விளையாட்டு, விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல; இந்த விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும்கூட விறுவிறுப்பைத் தரும். என்ன, விளையாடிப் பார்ப்போமா..!

( இன்னும் விளையாடலாம் )

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x