லப்டப் சொல்லும் சேதி!

லப்டப் சொல்லும் சேதி!
Updated on
1 min read

தேர்வு எழுதிய களைப்பில் காலாண்டு விடுமுறையை ஓய்வாகக் கழித்து வருகிறீர்களா? உழைப்புக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுப்பது ரொம்ப அவசியம். அதேநேரம் நமக்காக நமது உடல் உள்ளுறுப்புகள் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைப்பது உங்களுக்குத் தெரியுமா? ‘லப்டப்..லப்டப்’ என எப்போதும் துடித்துக்கொண்டிருக்கும் நமது இதயம், உடல் உள்ளுறுப்புகள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இதயம் குறித்த சுவாரசியங்களைப் பார்ப்போமா?

# இதயத்தில் கை வைத்துப் பார்த்தால் ‘லப்டப்..லப்டப்’ எனத் துடிப்பதை உணர்கிறோம் அல்லவா? இதயத்தில் உள்ள 4 அறைகளின் வால்வுகள் திறந்து மூடும் ஒலிதான் அது.

# இதயம் என்பது தசையால் ஆன ஓர் உறுப்பு. நமது உடலில் வேறெந்த தசையைவிடவும் அதிகம் உழைப்பது இதயத் தசைகளே.

# மனிதனின் இதயம் நிமிடத்துக்கு சராசரியாக 72 முறை துடிக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சம் முறை துடிக்கும். மனிதனின் வாழ்நாளில் அதிகபட்சமாக 350 கோடி முறை இதயம் துடிக்கிறது.

# இதயம் ஒரு மணி நேரத்தில் 378 லிட்டர் ரத்தத்தை ‘பம்ப்’ செய்கிறது. மணிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் ரத்தக் குழாய்களுக்கு ரத்தத்தை இதயம் அனுப்புகிறது.

# இதயத் துடிப்பை அறிய டாக்டர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ கருவி 1816-ல் உருவாக்கப்பட்டது.

# அம்மா வயிற்றில் 5 வாரக் கருவாக இருக்கும்போது தொடங்கும் இதயத் துடிப்பு, இறக்கும்வரை தொடர்கிறது.

# ஒரு நிமிடத்தில் ஆணைவிடப் பெண்ணின் இதயம் சராசரியாக 8 முறை அதிகம் துடிக்கிறது.

# தான் துடிப்பதற்கான மின்சாரத்தைத் தானே உற்பத்தி செய்துகொள்வதால், உடலில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட நேரம்வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.

இதயங்களில் எத்தனை அறை?

கடல் வாழ் உயிரியான நீலத் திமிங்கலத்தின் இதயத்தின் எடை சுமார் 680 கிலோ. ரீங்காரச் சிட்டின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 1,260 முறை. பறவைகள் மற்றும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இதயம் நான்கு அறைகளால் ஆனது. விதிவிலக்காகத் தவளை, பல்லி போன்றவற்றின் இதயத்தில் 3 அறைகள் மட்டுமே உள்ளன. கடலின் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் சிலவற்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இதயங்கள் உண்டு. உதாரணமாக, ஆக்டோபஸுக்கு 3 இதயங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in