இந்த உயிரினங்களைத் தெரியுமா?

இந்த உயிரினங்களைத் தெரியுமா?
Updated on
1 min read

அதிக அளவில் உள்ள விலங்குகளைப் பற்றி நமக்கு அதிகத் தகவல்கள் தெரியும். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்குகளின் பெயர்கள்கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சில விலங்குகளைப் பார்ப்போமா?

எம்பெரர் டாமரின்

குரங்குகளில் எத்தனையோ வகைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எம்பெரர் டாமரின் (emperor tamarin) என்ற குரங்கைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? இது அரிய வகை குரங்கினம். பிரேசில், பெரு, பொலிவியா போன்ற தென்னமெரிக்க நாடுகளில் மட்டுமே இது உள்ளது. இந்தக் குரங்கின் முகத்தில் அடர்த்தியான மீசை ரோமங்கள் இருக்கும். அரசர்களுக்கு இருப்பது போலவே மீசை இருப்பதால், இந்தக் குரங்குக்கு எம்பெரர் என்ற பெயரையும் சேர்த்து அழைக்கிறார்கள். இவை எப்போதும் குடும்பமாகத்தான் வாழும். ஒரு குடும்பத்தில் மூன்று முதல் எட்டு குரங்குகள்வரை இருக்குமாம்.

பொனோபோ

எம்பெரர் டாமரின் போலவே இன்னொரு அரிய வகை குரங்கு பொனோபோ (bonobo). ஆப்பிரிக்காவின் காங்கோ காடுகளில் மட்டுமே உள்ள குரங்கினம் இது. மனிதர்களின் மரபணுவுடன் 98.5 சதவீதம் ஒத்துப் போகும் குரங்கு இது. இந்தக் குரங்குகளிடம் மனிதனின் நிறைய குணங்கள் உள்ளன. மனிதனைப் போலப் பேச, கருவிகளைக் கையாள, இசைக் கருவிகளை இயக்கச் சீக்கிரமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் குரங்கும் கூட்டமாகவே வாழும். பார்ப்பதற்கு சிம்பன்ஸி போலவே இருப்பதால் இதை ‘குள்ளச் சிம்பன்ஸி’ என்றும் அழைக்கிறார்கள்.

காகாபோ

சினிமா வசனம் போல இருக்கும் காகாபோவை (kakapo) தமிழில் ‘ஆந்தை கிளி’ என்று அழைப்பார்கள். இது நியூசிலாந்தில் மட்டுமே காணப்படுகிறது. உலகின் ஒரே பறக்க முடியாத கிளி இது. இதன் எடையும் மிகமிக அதிகம். அதிக ஆண்டுகள் உயிர் வாழும் அரிய பறவை இது. சில கிளிகள் 120 ஆண்டுகள்வரைகூட உயிர் வாழும். இந்தக் கிளிகள் இறைச்சிக்காகவும் இறகுகளுக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன.

தகவல் திரட்டியவர்: ஏ. அசோக், 11-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in