

சூரியனை ஒரு பெரிய பந்துபோல் கற்பனை செய்துகொண்டால் 10 லட்சம் பூமிப் பந்துகளை அதற்குள் நிரப்பிவிடலாம். இவ்வளவுக்கும் சூரியன், சராசரி அளவுள்ள நட்சத்திரமாகவே கருதப்படுகிறது.
******
சூரியக் குடும்பத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருக்கும் ஒரே கோள் நாம் வாழும் பூமிப் பந்து மட்டுமே.
******
பூமிப் பந்தின் அனைத்துக் கடற்கரைகளில் உள்ள மணல் துகள்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமாகப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் குவிந்துகிடக்கின்றன. குறைந்தபட்சமாக என வைத்துக்கொண்டால்கூட 10 லட்சம் கோடி நட்சத்திரங்கள்.
******
ஒவ்வோர் ஆண்டும் பூமியின் விண்வெளிக்குள் கார் அளவுள்ள விண்கல் நுழைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது தரையை வந்தடைந்து நம் தலையில் முட்டுவதற்கு முன் எரிந்து சாம்பலாகிக் காற்றில் கலந்துவிடுகிறது.
******
பூமிப் பந்தைச் சுற்றி மனிதர்கள் கைவிட்ட விண்வெளிக் குப்பைகள் வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருக்கின்றன. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும்போது கைவிடப்பட்ட ஸ்பானர்கள் என ஐந்து லட்சம் பொருட்கள் இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
******
மனிதர்கள் இதுவரை அறிந்ததிலேயே மிக உயரமான மலை வெஸ்டா எனப்படும் விண்கல்தான். இது 22 கி.மீ. உயரம் கொண்டது. அதாவது பூமியின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தைப்போல ஐந்து மடங்கு உயரம்.
******
வால் நட்சத்திரங்கள் என்பவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவானபோது விடுபட்ட எச்சங்கள்தான். இவற்றில் மணல், பனிக்கட்டி, கார்பன் டைஆக்சைடு நிரம்பியிருக்கிறது.
******
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்களின் மேல் மனிதர்கள் நடக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கோள்களின் மேற்பரப்பு திடமாக இல்லை.
******
ஒரு விமானத்தில் புளூட்டோவுக்குப் போவதாக வைத்துக்கொண்டால், போய்ச் சேர 800 ஆண்டுகள் ஆகும்.
******
மாலையில் சூரியன் மறையும்போது ஆரஞ்சு சிவப்பு நிறத்தில்தான் நமக்குத் தெரியும். சிவப்பு கோளான செவ்வாயில் சூரியன் மறைவு நீல நிறத்தில் இருக்கும்.
நீல நிறத்துல நா அழகா இருக்கேன்ல!