

கடற்கரை மணலில் உட்கார்ந்து செல்போனிலோ அல்லது ஐ-பாட்டிலோ பாடல் கேட்டிருப்பீர்கள். ஆனால், கடற்கரை மணலே பாடினால் எப்படியிருக்கும்? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஸ்காட்லாந்தில் உள்ள மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஈக் என்ற தீவில் கடற்கரை மணல் பாடுகிறது. இந்தக் கடற்கரை மணலில் நடந்தாலோ, தொட்டாலோ இன்னிசை ஒலிகள் கேட்கின்றன. அப்படிக் கேட்கும் இந்த இன்னிசை பல ஸ்வரங்களிலும் உள்ளன.
இது எப்படி சாத்தியம்? அந்த மணலின் வடிவமைப்பில் உள்ள விசேஷமே இந்த அதிசயத்துக்குக் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பொதுவாக மணல்களில் இசை பிறக்க வேண்டுமென்றால், அதற்கு மூன்று விஷயங்கள்தான் காரணமாம். ஒன்று, ஒவ்வொரு மணல் துகளும் உருண்டையாகவும், 1 முதல் .5 மி.மீ வரை விட்டமாகவும் இருக்க வேண்டும். இரண்டு, அந்த மணலில் குறிப்பிட்ட அளவில் சிலிகா இருக்க வேண்டும். மூன்று, மணலில் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் இருந்தால், எல்லா மணலும் இன்னிசையை ஒலிக்கும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இப்படிப்பட்ட மணல் காற்றால் அசையும்போதும் மனிதர்கள் அதில் நடக்கும்போதோ அல்லது தொடும்போதோ அதிர்வுகள் உண்டாகி, இசையொலி கேட்கிறது. ஈக் கடற்கரை மட்டுமல்லாமல், சில பாலைவனங்களிலும்கூட பாடும் மணல் உள்ளன.
தகவல் திரட்டியவர்: கே. முருகவேல், 9-ம் வகுப்பு,
சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி,
நுங்கம்பாக்கம்.
கடலுக்கடியில் பிரம்மாண்டமான மலை
நிலப்பரப்பைப் போலவே கடலுக்கடியிலும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளன. கடலுக்குள் இருக்கும் சில மலைகள், நிலத்தில் இருக்கும் மலைகளைவிட உயரமாகக்கூட இருக்குமாம். உதாரணத்துக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் என்ற எரிமலை உள்ளது. இதன் மொத்த உயரம் 9.9 கிலோமீட்டர். அதாவது இமயமலை எவரெஸ்ட் சிகரத்தைவிட 1.2 கிலோமீட்டர் அதிக உயரம். இதில் 3.3. கிலோமீட்டர் உயரம் கடல் பரப்பின் மேலேயே தெரியும். எஞ்சிய மலை கடலுக்குள் 6.6 கிலோமீட்டர் உயரத்தை மறைத்துக்கொண்டுள்ளது.
தகவல் திரட்டியவர்: வி.விக்னேஷ்,
8-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருத்தணி.