Last Updated : 19 Oct, 2016 10:39 AM

 

Published : 19 Oct 2016 10:39 AM
Last Updated : 19 Oct 2016 10:39 AM

தினுசு தினுசா விளையாட்டு: பூப்பறிக்க வருகிறோம்... வருகிறோம்...!

குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தால், சின்ன வயதில் விளையாடியதெல்லாம் நமக்கும் ஞாபகத்துக்கு வரும்தானே! விளையாடியதைப் பற்றி சந்தோஷமாகக் குழந்தைகள் சொல்கிறார்கள். பெரியவர்கள் அவர்களுடைய காலத்து விளையாட்டுகளைப் பத்தி ஆர்வமாக எழுதி அனுப்புறார்கள். போன வாரம் வந்த ‘கண்ணாமூச்சி ரே… ரே..!’ விளையாட்டு எப்படி இருந்தது? ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறதல்லவா?

இந்த வார விளையாட்டு என்னத் தெரியுமா? ‘பூப்பறிக்க வருகிறோம்…!’

எத்தனை பேர் தேவை?

இந்த விளையாட்டை விளையாட இரண்டு குழுக்கள் வேண்டும். இரண்டு குழுக்களும் சம பலம் உள்ள குழுவாக இருக்க வேண்டும்.அப்போதுதானே நன்றாக விளையாட முடியும்.

விளையாடுபவர்களைச் சம பலமுள்ள இரண்டு குழுக்களாகப் பிரிக்க, சிறிய விளையாட்டு ஒன்று உள்ளது. அதுக்குப் பேரு ‘உத்தி பிரித்தல்’.

குழுத் தலைவர்களாக இரண்டு பேரை முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அப்புறம், ஒரே வயசுள்ள பிள்ளைகள் இரண்டிரண்டு பேராக ஜோடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாகப் போய், ஆளுக்கொரு பெயரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அது நம்ம தேசத் தலைவர்களின் பெயராகவும் இருக்கலாம். பழங்கள், பூக்கள் என எந்தப் பெயராகவும் இருக்கலாம். அப்படி ஆளுக்கொரு பெயர் வைத்துக்கொண்ட பிறகு, இரண்டு பேரும் குழுத் தலைவர்கள் அருகே வருவார்கள்.

எப்படி விளையாடுவது?

“உத்தி, உத்தி யாரு, உத்தி...?” என்று கேட்க வேண்டும். இரண்டு குழுத் தலைவர்களில் யாராவது ஒருவர், “என்னோட உத்தி” என்று சொன்னவுடனே, “மாம்பழம் வேண்டுமா, கொய்யாப்பழம் வேண்டுமா...?” என்று திரும்பவும் கேட்க வேண்டும்.

“எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்” என்று கேட்ட தலைவருடைய குழுவுக்குக் கொய்யாப்பழம் என்று பெயர் வைத்தவர் போய்விட வேண்டும்.

இன்னொருவர், அதாவது மாம்பழம் பெயர் வைத்தவர் அடுத்த குழுவுக்குப் போய்விட வேண்டும். இப்படியே எல்லாரும் இரண்டு குழுவாகப் பிரிந்துகொள்ள வேண்டும்.

முதல் குழுத் தலைவர் தன்னோட குழுவைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய், ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பூவின் பெயரை வைப்பார்.

இரண்டு குழுவும் தங்களுடைய குழுவுடன் கைகளைக் கோத்துக்கொண்டு, நேர்நேராகப் பார்த்த மாதிரி நிற்க வேண்டும்.

“பூப்பறிக்க வருகிறோம் இந்த மாதத்தில்...!” என்று முதல் குழுவினரைப் பார்த்துப் பாடிக்கொண்டே இரண்டாம் குழுவினர் முன்னோக்கிச் செல்வார்கள்.

உடனே முதல் குழுவினர், “எந்தப் பூவைப் பறிக்கிறீர் இந்த மாதத்தில்...?” என்று கேள்வி கேட்டபடி, இரண்டாவது குழு பார்த்தபடி முன்னோக்கி வர, இரண்டாம் குழுவினர் பின்னோக்கிச் செல்வார்கள்.

“மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்..!” என்று இரண்டாம் குழு கூறியதும், முதல் குழுவில் யாருக்கு ‘மல்லிகை பூ’ என்று பெயர் வைத்தார்களோ அவர் முன்னால் வர வேண்டும். அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று, முன்னால் இருப்பவரின் இடுப்பை இறுகக் கட்டிபிடித்துக் கொள்ள வேண்டும். அதேபோல், அடுத்த குழுவினரும் கட்டி பிடித்துக்கொண்டு எதிர் எதிராக நிற்பார்கள்.

இரண்டு குழுவிலும் முன்னால் நிற்பவர் ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, பின்னால் இருப்பவர்கள் பலத்தைத் திரட்டி, அவரவர் பக்கம் இழுக்க வேண்டும். எந்தக் குழு வேகமாக முன்னால் இழுக்கிறதோ,அந்தக் குழுவே வெற்றி பெற்ற குழு.

விளையாட்டு புரிந்ததா? இப்படியே ஒவ்வொரு பெயராகச் சொல்லி விளையாட்டைத் தொடரலாம். எங்க விளையாடத் தயாராகிவிட்டீர்களா?

எங்கே சொல்லுங்கள், ‘பூப்பறிக்க வருகிறோம்… வருகிறோம்…!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x