

கரடி பொம்மை என்றாலே குழந்தைகளுக்கு அலாதிப் பிரியம்தான். பெரியவர்கள்கூட ஆசையுடன் வாங்கி வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் கரடி பொம்மைக்கு, டெடி பியர் என்ற பெயர் எப்படி வந்தது எனத் தெரியுமா? அதற்கு சுவாரசியமான ஒரு பின்னணி உண்டு.
கரடி பொம்மை முதன் முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகமானது. அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். 1902ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று மிசிசிபி பகுதியில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது காயத்துடன் உலாவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவர்கள் கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதை சுடாமல் விட்டுவிட்டார்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியது. பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் செய்திகள் வந்தன. தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு ‘டெடி’ என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ‘டெடி பியர்’ என்று (ரூஸ்வெல்ட்டும் கரடியும் என்ற பொருளில்) பெயர் சூட்டியிருந்தனர். இந்த பரபரப்பை பொம்மை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. அன்று முதல் ‘டெடி பியர்’ என்பது கரடி பொம்மையின் பெயரானது. அது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி ‘டெடி பியர்’ தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.