சித்திரக்கதை: சுண்டெலிக்குக் கல்யாணம்

சித்திரக்கதை: சுண்டெலிக்குக் கல்யாணம்
Updated on
2 min read

ஒரு முனிவர் நதிக்குப் போனார். நன்றாகக் குளித்துவிட்டுக் கரைக்கு வந்தார்.

அப்போது ‘தொப்’பென்று ஒரு சுண்டெலி மேலே இருந்து விழுந்தது. அது ஒரு பெண் சுண்டெலி. உடனே முனிவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். ஒரு பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அதுதான் சுண்டெலியைத் தவறிக் கீழே போட்டுவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டார்.

சுண்டெலி துடிதுடித்துக் கொண்டிருந்தது. முனிவருக்கு இரக்கம் உண்டானது. அவர் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொன்னார். உடனே அந்தச் சுண்டெலி ஒரு சிறு பெண்ணாக மாறியது. முனிவர் அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஆசிரமத்துக்குப் போனார். அன்பாக வளர்த்துவந்தார்.

காலங்கள் உருண்டோடின. அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய வயது வந்தது. அவளை யாருக்குக் கல்யாணம் செய்துகொடுக்கலாம் என்று முனிவர் யோசித்தார். சூரியனுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவன்தான் நல்ல பலசாலி என்று தீர்மானித்தார் முனிவர்.

உடனே சூரியனை வரவழைத்தார். சூரியன் வந்ததும், “ஏனம்மா, உனக்கு இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

‘இவரா? ஐயையோ வேண்டவே வேண்டாம். இவர் ஒரே சூடாக இருக்கிறார். என்னால் இந்தச் சூட்டைத் தாங்கவே முடியாது. இவரைக் காட்டிலும் பலசாலியைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்றாள்.

“அப்படியானால், மேகத்தைக் கல்யாணம் பண்ணிக்கொள். மேகம்தான் என்னைவிட பலசாலி. அது அடிக்கடி என்னையே மறைத்துவிடுகிறது” என்றது சூரியன்.

உடனே முனிவர் மேகத்தை வரவழைத்தார். மேகத்தைப் பார்த்ததும், “ஐயோ, இவர் ஒரே கறுப்பு. எனக்கு வேண்டாம். இவரைவிட பலசாலிதான் வேணும்” என்றாள்.

“காற்றுத்தான் என்னைவிட பலசாலி. அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்” என்றது மேகம்.

சொல்லி முடித்தவுடன், முனிவர் காற்றை வரவழைத்தார்.

காற்றைப் பார்த்ததும், “இவரோடு எப்படி நான் வாழ முடியும்? இவர் ஓர் இடத்திலேயே தங்க மாட்டார். எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார். இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் பலசாலியைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்றாள்.

“என்னைக் காட்டிலும் பலசாலி மலைதான். என்னால் மலையை அசைக்கக்கூட முடியவில்லையே!” என்றது காற்று.

முனிவர் மலையையும் வரவழைத்தார்.

மலையைப் பார்த்ததும், “இவர் ஒரே கரடுமுரடாக இருக்கிறார். இருந்த இடத்தை விட்டு இப்படி அப்படி அசைய மாட்டார். எனக்கு இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் வேறு பலசாலி கிடையாதா?’ என்று கேட்டாள் பெண்.

“ஏன் இல்லை? சுண்டெலி இருக்கிறதே! அது என்னைவிட பெரிய பலசாலி. என் வயிற்றையே அது குடைந்துவிடுகிறதே!” என்றது மலை. உடனே முனிவர் சுண்டெலியை வரவழைத்தார். சுண்டெலியைப் பார்த்ததும், “ஆஹா... இவர்தான் எனக்குப் பிடித்தமான மாப்பிள்ளை. என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன சுறுசுறுப்பு!” என்றாள் பெண்.

இதைக் கேட்டதும் முனிவர் மகிழ்ச்சி அடைந்தார்.உடனே ஒரு மந்திரத்தைச் சொன்னார். சொல்லி முடித்ததும் அந்தப் பெண் பழையபடி சுண்டெலியாக மாறிவிட்டாள்.

சுண்டெலிப் பெண்ணுக்கும் சுண்டெலி மாப்பிள்ளைக்கும் முனிவர் கல்யாணம் பண்ணிவைத்தார். கல்யாணம் வெகுவெகு சிறப்பாக நடந்தது.

குழந்தைக் கவியின் கதை!

‘குழந்தைக் கவிஞர்’ என்றழைக்கப்படும் அழ. வள்ளியப்பா ஏராளமான சிறுவர் பாடல்கள், சிறுவர்கள் கதைகளை எழுதியிருக்கிறார். ‘மாம்பழமாம் மாம்பழம்...’, ‘தோசை நல்ல தோசை...’ எனத் தொடங்கும் ஏராளமான சிறுவர் பாடல்கள் இன்றும்கூடக் குழந்தைகளின் கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வாழ்நாள் முழுவதையும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குச் செலவிட்டவர். ‘கோகுலம்' குழந்தைகள் மாத இதழின் கவுரவ ஆசிரியராவும் இருந்தார்.

‘மலரும் உள்ளம்', ‘சிரிக்கும் பூக்கள்' எல்லாம் அவருடைய குழந்தை பாடல் தொகுதிகள். ‘ஈசா கதை பாடல்கள்', ‘பாட்டிலே காந்தி கதை' புத்தகங்கள், ‘நீலா மாலா', ‘நல்ல நண்பர்கள்' போன்ற கதைப் புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கார். அவர் எழுதிய ‘நான்கு நண்பர்கள்’ நூலில் உள்ள ஒரு கதைதான் இங்கே படித்த சுண்டெலிக்குக் கல்யாணம்.

இனி ஒவ்வொரு மாதமும் புகழ்பெற்ற கவிஞர்கள் எழுதிய குழந்தைக் கதைகளை மாயா பாஜாரில் படிக்கப் போகிறீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in