

மனிதர்களின் மிகமிக முக்கியத் தேவை பணம். அந்தப் பணம் பற்றி உலகில் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
# கிளிஞ்சல்கள், பட்டு, உப்பு, தேயிலை உட்படப் பலவும், ஒரு காலத்தில் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது முதன்மையான பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளைப் பெற்றுக்கொள்வது.
# கிரேக்கப் பெண் கடவுள் ஏத்னாவும் புனிதமாகக் கருதப்பட்ட அவருடைய ஆந்தையும் இடம்பெற்ற நாணயங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பண்டைய கிரீஸில் வெளியிடப்பட்டுள்ளன.
உயிரினங்களுக்கும் புராணங்களுக்கும் மனிதர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் இதிலிருந்து அறியலாம். இப்போதும்கூட நம்முடைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் உயிரினங்கள் இடம்பெற்றே வருகின்றன.
# 1636-ம் ஆண்டில் நெதர்லாந்தில் ஒரு பூவைக் கொடுத்தால் ஒரு வீட்டையே வாங்கி விடலாம் என்ற நிலை இருந்தது. உலகப் புகழ்பெற்ற ட்யூலிப் மலர்கள் நெதர்லாந்தில் அந்தக் காலத்தில் அவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன.
# கம்போடியத் தலைவர் சிஹானோக் தலைமையிலான ஆட்சியில் 1975-ல் கம்போடிய பணம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. பணப் பரிமாற்றத் தேவை சில காலம் ஒழிக்கப்பட்டிருந்தது. நவீன உலக வரலாற்றில் பணம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது இந்த ஒரு முறை மட்டுமே.
# ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள போட்ஸ்வானா பாலைவனங்கள் நிரம்பிய நாடு. அந்த நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் பெயர் புலா. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மழை என்று அர்த்தம். எவ்வளவு அர்த்தம் மிகுந்த பெயர் இது!
# பொதுவாக நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்களே இடம்பெறுவது வழக்கம். பெல்ஜியம் நாட்டிலோ ஒரு கற்பனையுலகச் சிறுவனுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கியது.
அந்தச் சிறுவன் பிரபல பெல்ஜிய காமிக்ஸ் நாயகன் டின்டின்னும் அவனுடைய நாய் ஸ்னோயியும். டின்டின் 75-வது ஆண்டையொட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
# ஜப்பானிய நாட்டுப் பணம் காகிதத்திலிருந்து தயாரிக்கப்படுவதில்லை. அப்புறம்? வாழை மரத்தின் நெருங்கிய உறவினரான அபகா தாவரத்தின் நார்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
# அமெரிக்க நாணயச்சாலை - பணம் அச்சடிக்கும் நிறுவனம். இங்கே ரூபாய் நோட்டுகளை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குப் பயன்படுத்தும் மையின் அளவு 8,500 கிலோ.