

சாலைகளில் மெதுவாக நகர்ந்து செல்லும் பெரிய பொக்லைன்களை பார்த்திருக்கிறீர்களா? 10 ஆட்கள் செய்யக்கூடிய வேலையைச் செய்யும் அளவுக்கு பலமானது பொக்லைன். அதுபோன்ற ஒரு குட்டி பொக்லைனை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், செய்து காட்டி அசத்தியிருக்கிறார். அவர் கோ. பாலமுகேஷ்.
மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறவும், அதன்மூலம் அவர்களுடைய திறமையை வளர்க்கவும் அறிவியல் மாதிரிகளைச் செய்யவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அப்படித்தான் 7-ம் வகுப்பு படிக்கும் பாலமுகேஷ், பள்ளியில் நடந்த அறிவியல் போட்டிக்காக ஹைட்ராலிக் மெஷின் மாதிரியைச் செய்தார். இந்த மாதிரி வரவேற்பைப் பெற்றுள்ளது.
மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசி, சிரிஞ்ச், டியூப், மரக்கட்டைகள், சிறு சக்கரங்கள் ஆகியவற்றை கொண்டு பாலமுகேஷ் இதை உருவாக்கியுள்ளார். இதை எப்படி செய்தார் என்பதை அவரே சொல்வதைக் கேளுங்களேன்:
“வீட்டில் இருந்த மரப்பலகை, மருந்துக்கடையில் கிடைத்த பொருள்களைக்கொண்டு இதைச் செய்தேன். காற்றின் அழுத்தம் மூலம் டியூபில் உள்ள நீரை இயக்கும்படி செய்தேன். இதிலுள்ள கைகள் போன்ற பிடிப்புகள் குட்டி பந்துகள் மற்றும் லேசான எடையுள்ள பொருட்களை தூக்கிவிடும். சக்கரங்களின் உதவியுடன் நகர்த்தவும் செய்யலாம்” என்றார். இதற்காக அவர் பெரிதாக செலவு செய்யவில்லை.
இன்று அறிவியல் திட்ட மாதிரிகளைக் காசு கொடுத்து செய்து கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அறிவியலைப் புரிந்துகொண்டு, சுயமாக குட்டி பொக்லைனை செய்த பாலமுகேஷை நாமும் பாராட்டுவோம்.