நான் எங்கே போகிறேன்?

நான் எங்கே போகிறேன்?
Updated on
1 min read

ஒரு முறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரின்ஸ்டன் நகரத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார். பயணிகளின் டிக்கெட்டைப் பரிசோதித்து முடித்து, பஞ்ச் செய்தார். பரிசோதகர் ஐன்ஸ்டீனிடம் வந்தார்.

ஐன்ஸ்டீன் தன்னுடைய கோட் பாக்கெட்டில் டிக்கெட்டைத் தேடினார். அங்கே டிக்கெட் இல்லை. உடனே தன் பேண்ட் பாக்கெட்டில் தேடினார். அங்கேயும் இல்லை. பிறகு தான் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு அடியில் தேடினார். எங்கு தேடியும் டிக்கெட் கிடைக்கவில்லை.

அவர் டிக்கெட்டைத் தேடுவதைப் பார்த்த பரிசோதகர், “ஐன்ஸ்டீன், நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். இங்கே இருக்கும் பயணிகளுக்கும் உங்களைத் தெரியும். அதுவும் இல்லாமல் நீங்கள் நிச்சயம் டிக்கெட் எடுத்திருப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களை நம்புகிறேன்” என்று சொன்னார். ஐன்ஸ்டீனும் பெருமிதமாகத் தலையசைத்தார்.

பிறகு அந்தப் பரிசோதகர் மற்ற பயணிகளின் டிக்கெட்டைப் பரிசோதித்தார். ஐன்ஸ்டீன் இருந்த பெட்டியில் சோதனை முடிந்தது. பரிசோதகர் அடுத்த பெட்டிக்குச் செல்ல முயன்றார். அப்போது ஐன்ஸ்டீன் மீண்டும் தன் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருப்பதைப் பரிசோதகர் பார்த்தார். ஐன்ஸ்டீனிடம் வந்தார். “நீங்கள் டிக்கெட் வாங்கியிருப்பீர்கள் என்று நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே. இப்போது ஏன் மீண்டும் அதைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும்” என்று சொன்னார்.

அதற்கு ஐன்ஸ்டீன், “நான் யார் என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் இப்போது எந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதுதான் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளதான் டிக்கெட்டைத் தேடுகிறேன்” என்று சொன்னாராம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in