நீங்களே செய்யலாம்: உங்கள் வீட்டுப் புலி!

நீங்களே செய்யலாம்: உங்கள் வீட்டுப் புலி!
Updated on
1 min read

பொம்மைகள் என்றால் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? காட்டில் உலவும் புலியை வீட்டில் செய்து பார்ப்போமா?

தேவையான பொருள்

பலூன், செய்தித்தாள், வெள்ளை பசை, மைதா மாவு பசை, கத்தி, கத்தரிக்கோல், சிறிய கூழாங்கற்கள், கனமான நூல், மெல்லிய கம்பி அல்லது பிளாஸ்டிக் ஒயர் (மீசைக்கு), அட்டை, போஸ்டர் வண்ணம் அல்லது எனாமல் வண்ணம்

செய்முறை

* ஒரு பலூனை நன்றாக ஊதி மெல்லிய நூலால் கட்டிக் கொள்ளுங்கள். பிறகு பலூனை இரு பகுதியாக்கித் திருகுங்கள். பிரித்த அந்தப் பகுதியையும் நூலால் கட்டிக்கொள்ளுங்கள்.

* இப்போது பலூன் தலைப்பகுதி, உடல் பகுதி போல இருக்கும். இந்தப் பலூனின் மேலே செய்தித்தாளைப் பட்டை பட்டையாகக் கத்தரித்து வெள்ளைப் பசையை அதிகமாகத் தடவி நன்றாக ஒட்டுங்கள்.

* படத்தில் காட்டியது போலப் பட்டைத் தாள்களை மேலும்மேலும் 3 அல்லது 4 அடுக்காக முழுமையாக ஒட்டி, 3 நாட்களுக்கு வெயிலில் நன்றாகக் காய வையுங்கள். நன்றாகக் காய்ந்தவுடன் கவனமாகக் கத்தியைக் கொண்டு உடல் பகுதியின் கீழிலிருந்து 2 செ.மீ. அளவுக்கு வெட்டுங்கள். உள்ளிருக்கும் பலூனையும் கத்தியால் கிழித்துவிட்டு உள்ளே கூழாங்கற்களைக் கொஞ்சம்கொஞ்சமாகக் கொட்டி வட்டமாக வெட்டி எடுத்த அட்டையால் மூடி ஒட்டிக்கொள்ளுங்கள். திரும்பவும் காகிதத்தை வெட்டி கனமாக இருக்கும் அளவுக்கு நிறைய ஒட்டுங்கள். அட்டையில் புலியின் காது மடலை இரண்டை வெட்டி தலை பகுதியில் காட்டியபடி ஒட்டி, ஒரு நாள் வெயிலில் காய வையுங்கள்.

* பிறகு கனமான நூலை வெட்டி அதற்கு வாலை ஒட்டி பிறகு வெள்ளை வண்ணம் பூசுங்கள்.

* கடைசியாகப் புலிக்கு அழகாக மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற வண்ணங்களைப் பூசுங்கள். கண், மூக்கு, வாய் ஆகியவற்றை அழகாக வரைந்து, கறுப்பு வண்ணம் கொண்டு கவனமாகப் புலிக்குக் கோடு போடுங்கள். கடைசியாக மெல்லிய பிளாஸ்டிக் ஒயர் கொண்டு மீசையை ஒட்டிவிடுங்கள்.

இப்போது புலி தயார். காட்டில் உள்ள புலி உங்கள் வீட்டு மேசையில் அழகாக உட்கார்ந்திருக்கும். இதுபோலப் பல விலங்குகளின் உருவ மொம்மைகளை பலூன் கொண்டு செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in