

குழந்தைகளே! உங்களுக்குப் பறக்க ஆசை தானே? கண்டிப்பாக இல்லாமலா இருக்கும். பறவைகள் போல இறக்கைகள் முளைத்து பறக்கும் சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்த உலகத்தையே சுற்றி வரலாம் இல்லையா? நமக்கே பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்போது, பறவையாக இருந்தும் பறக்க முடியாத பெங்குயின்களுக்கு ஆசை இருக்காதா என்ன? அப்படிப்பட்ட ஒரு பெங்குயின் பற்றிய குறும்படம்தான் ஃப்ளைட். (Flight).
இந்தக் கதையில் வரும் பெங்குயின் தன்னால் பறக்க முடியும் என்று எப்போதும் நினைக்கிறது. பறக்க முடியாது என்று நண்பர்கள் சொன்னாலும், கேட்காமல் பறக்கும் ஆசையோடு இருக்கிறது. ஒரு நாள் கனவு காண்கிறது அது. அந்தக் கனவில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறது. பனியால் கட்டிய வீட்டின் மேல் இருந்து குதித்து பறக்க முயற்சிக்கிறது. அதில் தோல்வி அடைகிறது.
பிறகு கட்டிடத்தின் மேலிருந்து குதித்து பறக்க முயற்சி செய்கிறது. அதிலும் தோல்விதான் மிச்சம். அப்புறம் ராக்கெட்டிலிருந்து பறக்க முயற்சிக்கிறது. அதுவும் தோல்விதான். அப்போது கனவிலிருந்து திடுக்கிட்டு எழுகிறது பெங்குயின். கனவுக்குப் பிறக்கும் அது முயற்சியை கைவிடவில்லை. இரவு பகலாக பல புத்தகங்களைப் படிக்கிறது. கடைசியில் ஒரு பறக்கும் கருவியைக் கண்டுபிடிக்கிறது. அதை வைத்து பறக்கிறது பெங்குயின். அந்தப் பறக்கும் கருவியும் புயலில் மாட்டிக்கொள்கிறது. அதனால் அந்த முயற்சியும் தோல்வி அடைகிறது.
பின்பு உயரமாகக் குதிக்கும் கருவியைக் கண்டுபிடித்து, உயரமாக தாவுகிறது. அந்தக் கருவியோ விமானத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதிலும் தோல்விதான். கடைசியாக ஒரு பீரங்கியைச் செய்து அதன் மூலம் பறக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சியாவது வெற்றி அடைந்ததா இல்லையா என்பதுதான் கதையின் முடிவு.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இக்குறும்படம் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.
</p>