

யோகாவை வளர்த்தெடுத்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் திருமலை கிருஷ்ணமாச்சாரி, பி.கே.எஸ். அய்யங்கார் மற்றும் டி.கே.வி.தேசிகாச்சாரி போன்றவர்கள். அவர்களைப் பற்றியும் பார்ப்போமா?
திருமலை கிருஷ்ணமாச்சார்யா
எல்லாருக்கும் பொதுவான யோகக் கலையை நபருக்கு நபர் வித்தியாசப்படுத்தி வழங்கியவர் யார் தெரியுமா? திருமலை கிருஷ்ணமாச்சார்யா. யோக மகரந்தா, யோகாசங்கலு, யோக ராஷ்யா, யோகவல்லி ஆகிய யோகாசனம் சார்ந்த நூல்களை இவர் எழுதியுள்ளார். ‘நவீன யோகாவின் தந்தை’ எனப் புகழப்படுபவர் திருமலை கிருஷ்ணமாச்சார்யா. ஹத யோகா எனப்படும் கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இமயமலையின் கயிலாய சிகரத்தில் வாழ்ந்து வந்த பிரம்மாச்சாரியா எனும் குருவிடம் 7 ஆண்டுகள் யோகா சூத்திரம், பதஞ்சலி யோகம் போன்றவற்றை இவர் கற்றார்.
1926-ல் மைசூர் மகாராஜா, நான்காம் கிருஷ்ண ராஜ வாடியார் அவருடைய அன்னையின் 60-ம் ஆண்டு நிறைவை வாரணாசியில் கொண்டாடினார். அப்போது யோகக் கலையிலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பெரும் புகழோடு விளங்கிய கிருஷ்ணமாச்சார்யாவை சந்தித்தார். இளைஞனான கிருஷ்ணமாச்சார்யாவின் திறமைகளைக் கண்டு வியந்த மகாராஜா, அரச குடும்பத்தினருக்கும் யோகா பயிற்சியளிக்கச் சொன்னார். குறுகிய காலத்திலேயே மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக உயர்ந்தார் கிருஷ்ணமாச்சார்யா.
யோக பலத்தினால் தம்முடைய திறனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்ட கிருஷ்ணமாச்சார்யா, கடினமான ஆசனங்களைச் செய்து காட்டுவது, வெறும் கைகளைக் கொண்டே ஓடிவரும் காரை நிறுத்துவது, கனமான பொருட்களைப் பற்களால் கட்டித் தூக்குவது போன்ற அரிய செயல்களை மக்களின் முன் நிகழ்த்திக் காட்டினார். மகாராஜாவின் ஆணைப்படி யோகக் கலையை ஊர் முழுவதும் பரப்பினார் கிருஷ்ணமாச்சார்யா.
சுதந்திரத்துக்குப் பின் அரசர்களின் கையிலிருந்து சமஸ்தானங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டன. இதன்பிறகு சென்னைக்கு வந்த கிருஷ்ணமாச்சார்யா, விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராக சில காலம் பணிபுரிந்தார். எண்ணற்ற மாணவர்களுக்கு யோகக் கலையைக் கற்றுக் கொடுத்தாலும் அவர் தன்னை குரு ஸ்தானத்தில் நினைத்துக் கொண்டதே இல்லை. தன்னையும் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு சீடன் என்றுதான் சொல்லிக் கொள்வார் கிருஷ்ணமாச்சார்யா.
பி.கே.எஸ். ஐயங்கார்
பி.கே.எஸ். தன் பெற்றோருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11-வது மகன். குடும்பத்தை வறுமை வாட்டியது. அவரது ஊரில் கடும் நோய்த்தொற்று பரவியதால் சிறு வயதில் அவருக்கு ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. கை, கால்கள் இயல்புக்கு மீறி மெலிந்து போயிருந்தன.
அவருக்கு 5 வயதானபோது குடும்பம் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தது. பிகேஎஸ் ஐயங்காரின் நெருங்கிய உறவினரான கிருஷ்ணமாச்சார்யா, அப்போது மைசூர் சமஸ்தானத்தில் யோகா குருவாக இருந்தார். அவர் பிகேஎஸ் ஐயங்காரை மைசூருக்கு அழைத்துச் சென்று யோகக் கலையைக் கற்றுக்கொடுத்தார். யோகம் பயிலும்போதே, பலவீனமான தன் உடல் பலமாவதை உணர்ந்தார்.
குருவின் ஆணைப்படி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் யோகா பயிற்சி மையத்தை 18 வயதில் தொடங்கினார். பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கான விளக்கங்கள், யோகக் கலையின் மேன்மை, யோகாசனத்தின் ஒளி, பிராணாயாமம் ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய நூல்கள் சாமானிய மக்களிடமும் யோகக் கலையைக் கொண்டு சேர்த்தன.
உடலை வருத்திக்கொள்ளும் பயிற்சியாக அப்போது யோகா கருதப்பட்டது. ஆனால், அது எளிமையும் இனிமையும் கொண்ட அனுபவத்தைத் தரும் கலையே என்பதை அனைவருக்கும் புரியவைத்தார் பி.கே.எஸ்..
தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட பல பிரபலங்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ளார் இவர். பெல்ஜியம் ராணி எலிசபெத்துக்கு சிரசாசனம் கற்றுத் தந்தார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகை கரினா கபூர் என மொத்தம் 4 தலைமுறையைச் சேர்ந்த பிரமுகர்களுக்கும் யோகா ஆசிரியராக இருந்த பெருமைக்குரியவர் பி.கே.எஸ்..
டி.கே.வி. தேசிகாச்சார்
யோக குருவில் டி.கே.வி. தேசிகாச்சாரும் ரொம்ப முக்கியமானவர். இவர் வேறு யாருமல்ல, திருமலை கிருஷ்ணமாச்சார்யாவின் மகன். தேசிகாச்சார் 1938-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி மைசூருவில் பிறந்தார். அப்பாவை போல அல்லாமல் நவீன கல்வியில் நாட்டம் கொண்டிருந்தார். கொஞ்சம் பெரியவரானதும் சிவில் இன்ஜினியராகி, அந்தத் துறையில் சிறந்து விளங்கினார். பிறகுதான் தன் தந்தையிடம் யோகா கற்றார். யோகாவின் மகத்துவத்தை எல்லோரும் கற்றுக்கொள்ளும் வகையில், 1976-ம் ஆண்டு சென்னையில் 'கிருஷ்ணமாச்சார்ய யோகா மந்திரம்' எனும் அமைப்பை நிறுவினார். தன் அப்பாவைப் போலவே யோகாவுக்காக வாழ்ந்தவர் டி.கே.வி. தேசிகாச்சார். முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பிரபலங்கள் இவரிடம் யோகா கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.