

உங்களுக்குப் பகல் பிடிக்குமா, இரவு பிடிக்குமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பகலைத்தான் சொல்வீர்கள் இல்லையா? பகலில்தான் பயமில்லாமல் இருக்கிறோம், நன்றாக விளையாடுகிறோம், விருப்பம் போலச் சுற்றுகிறோம். அது மட்டுமல்ல, இருட்டு என்றாலே கொஞ்சம் பயம். பகலில் சர்வசாதாரணமாக நடமாடிய பகுதிகளில் இரவில் செல்லவே பயப்படுகிறோம்.
உண்மையில் இரவுதான் உன்னதமானது. பகலைவிட இரவில்தான் நாம் நிறைய விழிப்புணர்வோடு இருக்கிறோம். மிகக் கவனமாக இருக்கிறோம். மிக மெதுவாக அடியெடுத்து வைக்கிறோம். சத்தங்களைக் கவனத்துடன் கேட்கிறோம். பொருட்களைத் தெளிவாகப் பார்த்து, அது என்ன பொருள் என்று முடிவு செய்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் நமது ஐம்புலன்களும் இருட்டில்தான் விழிப்போடு இருக்கின்றன.
ஆனாலும் உங்களைப் போற்ற குழந்தைகளுக்குப் பிடித்தது பகல் பொழுதுதான் அல்லவா? ‘காலை எழுந்தவுடன் படிப்பு. மாலை முழுவதும் விளையாட்டு’ என்று பகல் பொழுதில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, இரவில் தூங்கப் போய்விடலாம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது பகல் நேரம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
இரவைப் பகலாக்கும் முயற்சியில். சில விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். ‘என்னது? இரவைப் பகலாக்கும் முயற்சியா?, இது நடக்குமா, சாத்தியமா?’ என்று
இரவை எப்படிப் பகலாக்க முடியும் ?
பகல் இரவு ஆட்டம் நடக்கும் ஸ்டேடியம் மாதிரி ஒரு நாடு முழுக்க லைட் போட்டுவிட முடியுமா? அப்படிப் போட்டால் மின்சார விளக்குதானே எரியும்? பகலில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்காதே!.
சூரியன் பக்கம் பூமியைத் திருப்பினால்தான் இரவைப் பகலாக்க முடியும். பூமியைச் சூரியன் பக்கம் திருப்ப முடியாது. ஆனால், சூரியனின் ஒளியைத் திருப்ப முடியும் அல்லவா? அப்படியொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள்.
அதாவது வானவெளியில் பிரம்மாண்டமான கண்ணாடிகளை நிறுவி, அங்கிருந்து சூரியனின் ஒளியைப் பூமிக்குப் பிரதிபலிக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் ஒரு வரி தத்துவம்.
வானவெளியில் அப்படியொரு பிரம்மாண்டமான கண்ணாடியை எப்படி நிறுவுவது? ஒரு பெரிய செயற்கைக்கோளில் கிட்டத்தட்டப் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கண்ணாடியை நிறுவி, அதிலிருந்து இருட்டான இடங்களுக்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்ய முடியும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள். இன்னும் 50 ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இந்தப் பெரிய கண்ணாடி என்பது நாம் முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி இருக்காது. சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்வதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுள்ள அந்தக் கண்ணாடி - சூரியப் பிரதிபலிப்பான் (Solar Reflector).
பத்து பவுர்ணமி நிலவுகள் சேர்ந்து பூமிக்கு வெளிச்சம் கொடுத்தால் எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ, அந்த அளவுக்கு இந்தச் சூரியப் பிரதிபலிப்பான் மூலம் ஒளியைப் பெற முடியும். இதன் மூலமாகச் சில முக்கிய நகரங்களின், சில சிறிய நாடுகளின் பகல்பொழுதை நீடிக்கச் செய்ய முடியும்.
இப்படி இரவைப் பகலாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்குவதற்குக் காரணம், பகல் எல்லோருக்கும் பிடித்ததாக இருப்பதுதான். அது மட்டுமல்ல, பகலை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மனித குலத்துக்கு நிறைய நன்மைகளைச் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.
அதாவது, குளிர்காலங்களைவிட வெயில் காலங்களில்தான் குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். குளிர்காலத்தில் குழந்தைகள் வளர்வதைவிட வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகமாக வளர்ச்சி அடைகிறார்கள். நுட்பமாகச் சொன்னால் இரவைவிட பகலில் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோன்கள் அதிகம் தூண்டப்படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சி நமக்கு 40 வயது வரை நடந்துகொண்டே இருக்கிறது.
மேலும் பயிர்களில் ஒளிச்சேர்க்கை நிகழ்ந்து பகலில் நன்றாக வளர்ச்சி அடைகின்றன. குளிர் பனியில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் குறைத்து, விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும். இதனால் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம்.
ஆக, பகலை அதிகரிப்பதன் மூலம் மனித குலத்துக்குப் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. அதே நேரம் இயற்கைக்கு மாறாக செய்யப்படும் இந்த முயற்சியே தேவையற்றது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இரவைப் பகலாக்க முடியுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com