

கைலாஷ் சத்யார்த்தி. கடந்த வாரம் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இவரைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. எல்லாக் குழந்தைகளும் படிக்கணும். படிக்கிற வயசுல வேலைக்குப் போகக் கூடாது. அப்படி அனுப்பப்படுற குழந்தைகளைக் காப்பாத்தி, படிக்க அனுப்புறதே கைலாஷ் சத்யார்த்தியோட வேலை.
‘பச்பன் பச்சாவோ ஆந்தோலன்'ன்னு சொல்லப்படுற குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் மூலமா இந்த வேலைகளை அவர் செஞ்சுகிட்டிருக்காரு.
ஒரு கோரிக்கை
ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர் விடுக்கும் முக்கிய கோரிக்கைகள்ல ஒண்ணு, "குழந்தைகளே, பட்டாசு வெடிக்காதீங்க"ங்கறதுதான். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள்ல குழந்தைத் தொழிலாளர்களை வைச்சுத்தான் பட்டாசு தயாரிக்குறாங்க. அது மட்டுமில்லாம பட்டாசு வெடிக்கிறதால சுற்றுச்சூழல் கெட்டுப்போய் நமக்கு நோய் வருதுன்னு அவர் சொல்லியிருக்கார்.
படிக்க வேண்டிய வயசுல நோட்டுல எழுதி, அழகா வரைஞ்சு, புத்தகத்தைத் தூக்கி வளர வேண்டிய குழந்தைகளோட கைகள், கந்தகத்தையும் வெடி மருந்தையும் பட்டாசு-மத்தாப்பில் திணிக்கிற வேலையைப் பார்க்குறாங்க. இப்படி ஒன்றரை லட்சம் குழந்தைகள், இரவும் பகலும் பட்டாசு ஆலைகள்ல உழைக்கிறாங்க.
பெரிய ஆபத்து
நமக்குக் கலர்கலராகவும், பிரகாசமாகவும், பெரும் சத்தத்துடனும் வெடிக்கும் - எரியும் பட்டாசுகளும் மத்தாப்புகளும் அவங்களோட வாழ்க்கையைப் பறிக்கின்றன. இந்தத் தொழில் மிகமிக ஆபத்தானது.
பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் கந்தகம், பொட்டாஷ், பாஸ்பரஸ், குளோரேட் போன்ற வேதிப்பொருட்கள் குழந்தைகளின் நுரையீரல், தோல், சிறுநீரகம், கண்களைப் பாதிக்கக்கூடியவை.
இது எவ்வளவு பெரிய ஆபத்து? அதோட பட்டாசு தயாரிக்கும்போது ஏற்படும் தீ விபத்துகளால எத்தனை பெரியவங்களும் குழந்தைகளும் செத்து போறாங்க. இதையெல்லாம் யோசிச்சு, பட்டாசு வெடிக்கிறதைக் கைவிடணும் குழந்தைகளே"ன்னு கைலாஷ் சத்யார்த்தி சொல்றார்.
மாணவர் பிரசாரம்
இவர் மட்டுமல்ல, தலைநகர் டெல்லில உள்ள பல்வேறு பள்ளிகள்ல “தூசும் புகையும் தரும் பட்டாசு வேண்டாம்”னு வலியுறுத்தும் பிரசாரத்தை ஆண்டுதோறும் பள்ளிக் குழந்தைகளே நடத்திட்டு வர்றாங்க. அதுல பங்கேற்கும் குழந்தைங்க, “பட்டாசு வெடிக்க மாட்டோம்”ன்னு உறுதிமொழி எடுத்துக்குறது மட்டுமில்லாம, பட்டாசு வாங்காம அதைக் கடைப்பிடிக்கவும் செய்றாங்க.
அதெப்படி இத்தனை நாள் ஜாலியா பட்டாசு வெடிச்சுட்டு, இப்போ வெடிக்க வேண்டாம்னா எப்படி முடியும்? ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். இந்த வருஷத்துலேர்ந்து பட்டாசு வெடிக்கிறதைக் குறைச்சுக்க ஆரம்பிக்கலாம். அதுக்கு பதிலாக நமக்குப் பிடிச்ச பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், வண்ண வண்ண மெழுகுவர்த்திகள், விளக்குகள் போன்றவற்றை அப்பா-அம்மா கிட்ட வாங்கித்தரச் சொல்லலாம். நம்ம அப்பா-அம்மாவும் நிச்சயமா கேப்பாங்க. இந்த தீபாவளிலேர்ந்து அதைத் தொடங்கலாமே.