

குழந்தைகளே சொன்ன, எழுதிய கதைகள், வரைந்த ஓவியங்களைக் கொண்டு வெளியாகும் சிறார் இதழ் எப்படியிருக்கும்? அந்தக் கனவை நிஜமாக்கியுள்ளது ‘குட்டி ஆகாயம்'.
இந்த உலகம் ஒரு பெரிய வானம் என்றால், அதில் மின்னும் ஆயிரம் ஆயிரம் நட்சத்திரங்களே குழந்தைகள். உங்களைப் போன்ற ஒவ்வொரு குழந்தையும் ஒரு நட்சத்திரம். உங்களுக்கு நிறைய தனித்திறமைகள் உண்டு, சிறப்புகள் உண்டு. அவற்றைக் கண்டுபிடித்து வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகிறது இந்த இதழ்.
இந்த இதழில் குழந்தைகள் வெளிப்படுத்தியுள்ள கற்பனை வளத்தையும் ஓவியத் திறமையையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களிடம் மறைந்து கிடக்கும் சிறந்த ஓவியத் திறமை வெளிப்படும்போது அழகும் தத்ரூபமும் நிறைந்ததாக இருக்கிறது. ஓவிய மேதை பிகாஸோ சொல்வதைப்போல, ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞர்தான்' என்பது புரிகிறது.
தாமிரபரணி சிறப்பிதழ்
வானம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இதழை நடத்துகிறார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ஊர்ஊராகச் சென்று குழந்தைகளையே கதை சொல்லவும் ஓவியம் வரையவும் ஊக்கப்படுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்தவற்றை இதழாகத் தொகுத்து வெளியிடுகிறார்கள். கடந்த ஆண்டு முதல் ‘குட்டி ஆகாயம்' இதழ் வெளியாகிவருகிறது.
சமீபத்தில் வெளியான இதழ், தாமிரபரணி ஆற்றைப் பற்றிய சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தாமிரபரணி ஆறு எந்த மலையில்-காட்டில் தோன்றுகிறது, அது எப்படியெல்லாம் சமவெளிகளில் பாய்ந்து வளப்படுத்துகிறது, கடைசியாக எந்த இடங்களைத் தொட்டுக் கடலில் கலக்கிறது என்பதை மிக எளிமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.
நம் வாழ்க்கையை நதிகளே வாழ வைத்துக் கொண்டிருந்தன. இன்றைக்கு மனிதர்களின் பல்வேறு சீரழிவுச் செயல்பாடுகளால், நதிகள் பெருமளவு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. நதிகளைப் பற்றி பெரியவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளாமலும், அவற்றின் பாரம்பரியத்தையும் சுற்றுச்சூழல் தொடர்புகளையும் உணராமலும் இருப்பதுதான் பிரச்சினைக்குக் காரணம்.
நம் வாழ்க்கையை நதிகளே வாழ வைத்துக் கொண்டிருந்தன. இன்றைக்கு மனிதர்களின் பல்வேறு சீரழிவுச் செயல்பாடுகளால், நதிகள் பெருமளவு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. நதிகளைப் பற்றி பெரியவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளாமலும், அவற்றின் பாரம்பரியத்தையும் சுற்றுச்சூழல் தொடர்புகளையும் உணராமலும் இருப்பதுதான் பிரச்சினைக்குக் காரணம்.
ஆசிரியர்களின் புதுமை அனுபவங்கள்
அதேநேரம் ஆறு, கடல், மலை, தண்ணீர் என்று நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு விஷயத்தையும் நேசிக்கும் உங்களைப் போன்ற குழந்தைகளுக்கு, உங்களுடைய சிறப்புகளை நேசிக்க உதவி புரிகிறது இந்த இதழ்.
இந்த இதழின் மற்றொரு முக்கியமான அம்சம், குழந்தைகளைச் சிரமப்படுத்தாமல் அவர்களுக்குப் பிடித்ததுபோல் எப்படி பாடங்களைக் கற்றுக்கொடுப்பது? இதைப் பற்றி நிறைய ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்களுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பெரியவர்கள் எழுதிய குழந்தைப் பாடல்கள், இயற்கை-காட்டுயிர்கள் பற்றிய எளிமையான கட்டுரைகளும் இதழுக்கு அழகு சேர்க்கின்றன.
‘குட்டி ஆகாயம்’ இதழின் ஆசிரியர்கள் நிழல், காந்தி. ரொம்ப எளிமையான, அதேநேரம் குழந்தைகளுக்குப் பிடித்தது போன்ற வண்ண வண்ணப் படங்களும் உறுத்தாத வடிவமைப்பும் வாசிப்பை உற்சாகப்படுத்துகின்றன. நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!
குட்டி ஆகாயம் தொடர்புக்கு: 96291 17123