

உலகின் மிகப் பெரிய ஆதிக்கச் சக்தியாக முன்பு விளங்கிய நாடு இங்கிலாந்து. இந்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா போன்ற பல காலனி நாடுகள் இருந்தன. அதனால்தான், ‘சூரியன் மறையாத' சாம்ராஜ்யம் என்று இந்த நாட்டைப் பெருமையாகச் சொன்னார்கள்.
மரியாதை சட்டங்கள், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ள நாடு இங்கிலாந்து. ஆனால், மன்னர் குடும்பம் இன்னமும்கூட அங்கே இருக்கிறது. இப்பவும் அரசர் / அரசிக்குத்தான் ‘முதல் மரியாதை'. ஏன் அப்படித் தெரியுமா? பழமைக்கும் மரபுகளுக்கும் இங்கிலாந்து நாட்டு மக்கள் ரொம்ப மதிப்பு கொடுப்பவர்கள். முன்பு உலகின் மிகப் பெரிய சக்தியாக அந்த நாடு விளங்கியது அல்லவா? அந்தப் பெருமையான கடந்த காலத்தின் தொடர்ச்சியாக அரச குடும்பத்தைப் பார்க்கிறார்கள். மற்றபடி, மன்னராட்சி தொடர வேண்டும் என்பதற்காக அல்ல.
வாழ்க அரசி
அரசன் அல்லது அரசி நலமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக இருக்கிறது இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம். அதனால்தான் ‘நீண்ட நாள் வாழட்டும் அரசர் / அரசி' என்று இப்பாடல் தொடங்குகிறது. இது அதிகாரபூர்வமாக இங்கிலாந்தின் தேசிய கீதமும் அல்ல. மரபு, வழக்கத்தின் படி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இங்கிலாந்தின் அரசவைப் பாடலை 'ராயல் சாங்' என்று சொல்கிறார்கள்.
இந்தப் பாடல், நியூசிலாந்து நாட்டில் இரண்டு தேசிய கீதங்களில் ஒன்றாகப் பாடப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும்கூட ‘அரசவைப் பாடல்' பயன்படுத்தப்படுகிறது.
யார், யார்?
இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யார் என்று உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் ‘ஜான் புல்' என்பவர்தான் இசையமைத்தார் என்று சொல்கிறார்கள். இப்பாடலின் முதல் இசைக் கோவை, 1744-ம் ஆண்டு, ‘தெசாரஸ் மியூசிகஸ்' என்ற ஓர் இசைப் பத்திரிகையில் வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டே ஸ்காட்லாந்து, இங்கிலாந்து பகுதிகளில் இது பிரபலமாகிவிட்டது. இப்பாடலுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பாடலின் சில வரிகள் பொதுவாகவும் பின்பற்றப்படுகின்றன.
இப்பாடல் ஏறத்தாழ இப்படி ஒலிக்கும்:
‘காட் சேவ் அவர் க்ரேசியஸ் க்வீன்
லாங் லிவ் அவர் நோப்ள் க்வீன்.
காட் சேவ் அவர் க்வீன்.
சென்ட் ஹெர் விக்டோரியஸ்
ஹேப்பி அண்ட் க்ளோரியஸ்
லாங் டு ரெய்ன் ஒவர் அஸ்
காட் சேவ் த க்வீன்.
ஓ லார்ட் அவர் காட் அரைஸ்
ஸ்கேட்டர் ஹெர் எ...னிமீஸ்
அண்ட் மேக் தெம் ஃபால்
கான்....ஃபௌண்ட் தெய்ர் பா..லிடிக்ஸ்
ஃப்ரஸ்ட்ரேட் தெய்ர் நே..விஷ் ட்ரிக்ஸ்
ஆன் தீ அவர் ஹோப்ஸ் வி ஃபிக்ஸ்
காட் சேவ் அஸ் ஆல்.
தை சாயிசெஸ்ட் கிஃப்ட்ஸ் இன் ஸ்டோர்
ஆன் ஹெர் பீ ப்ளெஸ்ட் டு ப்போர்
லாங் மே ஷீ ரெய்ன்
மே ஷீ டிஃபண்ட் அவர் லாஸ் (laws)
அண்ட் எவர் கிவ் அஸ்
... காஸ்
டு சிங் வித் ஹார்ட் அண்ட் வாய்ஸ்
காட் சேவ் த க்வீன்.'
இதன் உத்தேச தமிழாக்கம்:
இறைவனே எங்கள் சீர்மிகு அரசியைப் பாதுகாவல் செய்.
நெடு நாள் வாழ்க எங்கள் புனித அரசி.
இறைவனே எங்கள் அரசியைப் பாதுகாவல் செய்.
அவளை வெற்றியின் பக்கம்,
மகிழ்ச்சி, மகிமையின் பக்கம் அனுப்பு.
எம் மீது நெடு நாள் ஆட்சி செலுத்த
இறைவனே அரசியைப் பாதுகாவல் செய்.
ஆண்டவரே எங்கள் இறைவனே எழுந்திரு
அவளது எதிரிகளைத் துகள்களாக்கு.
அவர்களை வீழச் செய்.
அவர்களது அரசியலைக் குழப்பமுள்ளதாக்கு (தோற்கடி)
நெறிகளற்ற அவர்களது தந்திரங்கள் விரக்தி அடையச் செய்.
உன் மீது எங்கள் நம்பிக்கைகளை நிலை நிறுத்தி இருக்கிறோம்.
இறைவனே எங்கள் எல்லாரையும் பாதுகாவல் செய்.
உன்னிடம் உள்ள ஆகச் சிறந்த வெகுமதிகளை
அவள் மீது பொழிவதாக அவள் ஆசீர்வதிக்கப் படட்டும்.
அவள் நெடுநாள் ஆட்சி புரியட்டும்.
எங்களின் சட்டங்களை அவள் பாதுகாக்கட்டும்
எப்போதும் எங்களுக்கு வழங்கட்டும்.
(அடுத்த வாரம் நிறைவுறும்)