

கோவையில் வசிக்கும் நானம்மாள் என்ற 96 வயது பாட்டியை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தள்ளாத வயதிலும் தளராமல் யோகா செய்து அசத்துகிறார் இந்தப் பாட்டி. கைகளைத் தரையில் ஊன்றி அந்தரத்தில் நிற்கிறார், குட்டிக்கரணம்கூடப் போடுகிறார். சிரசாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களைச் செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறார் இவர்.
குழந்தையாக இருந்தபோதே தன் தாத்தா, பாட்டி யோகா செய்வதைப் பார்த்து, யோகா செய்யத் தொடங்கிவிட்டார் நானம்மாள். தற்போது யோகா ஆசிரியரான இவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பல்வேறு யோகா போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் இவர். வீடு முழுவதும் கோப்பைகளும் விருதுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. பாட்டியைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் ஏராளமாக வந்திருக்கின்றன. இவரது வீடியோவை உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
“யோகா செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆயுள் அதிகரிக்கும். இந்த வயதிலும் என்னால் ஊசியில் நூல் கோக்க முடிகிறது. காது நன்றாகக் கேட்கிறது. வேகமாக மாடிப்படிகளில் ஏறி இறங்குவேன். மூட்டுவலி, கழுத்து வலி என்று எந்த நோயும் வந்ததில்லை. அதனால் ஊசி, மாத்திரை போட்டுக்கொண்டதில்லை. நினைவாற்றல் அதிகரிக்கும். அதனால் பாடங்கள் நன்றாக மனதில் பதியும். சாப்பிடுவது, தூங்குவதுபோல யோகாவைத் தினமும் செய்துவந்தால் ஆரோக்கியமான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்” என்கிறார் நானம்மாள் பாட்டி.
இனி நீங்களும் யோகா கற்றுக்கொண்டு செய்வீர்கள் அல்லவா?