

பொதுவாக ஆறுகள் கடைசியில் கடலில் போய்க் கலந்துவிடும் என்றுதானே படித்திருக்கிறீர்கள். ஆனால், தென் ஆப்ரிக்காவின் அங்கோலா பீடபூமியில் உற்பத்தி ஆகும் ஒக்கவாங்கோ நதி கொஞ்சம் வித்தியாசமானது.
1,600 கிலோ மீட்டர் பயனிக்கும் இந்த ஆறு மற்ற நதிகளைப் போலக் கடலில் சங்கமிக்காமல் கலஹாரி பாலைவனதின் மையப்பகுதியில் டெல்டாவாக மாறிவிடுகிறது!
இந்த நதி ஆப்ரிக்காவின் நான்காவது பெரிய நதி. வட மேற்கு போட்ஸ்வானாவில் உள்ள இந்த டெல்டா, நிரந்தரச் சதுப்பு நிலம். அங்கோலா பீடபூமியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பெய்யும் மழை நீர் இந்த நதியின் மூலம் இந்த டெல்டாவை மே மாதத்தில் வந்தடையும். இதில் என்ன ஆச்சரியம் என்றால், மே மாதம் இப்பகுதியில் வறட்சி நிலவும்.
மே முதல் ஜூலை வரை நீர் நிறைந்து காணப்படும் இந்த டெல்டா ஆகஸ்டுக்குப் பிறகு படிப்படியாக நீர் இன்றி சுருங்கி விடும்.
பலதரப்பட்ட விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகளுக்கு இந்த டெல்டா ஒரு சொர்க்கப் பூமியாகத் திகழ்கிறது. ஒக்கவாங்கோ டெல்டா காலநிலை, நீரியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளிடையேயான தொடர்புக்கு ஓர் விதிவிலக்கான உதாரணமாக விளங்கி வருகிறது.
மிக அருகி வரும் உயிரினங்களின் இருப்பிடமாக இருக்கும் இந்த டெல்டாவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்துப் பெருமை சேர்த்திருக்கிறது.
-சுகல்பா,
திருநெல்வேலி