

மெத்து மெத்தென்று இருக்கு ஷூவைக் காலில் அணிய எல்லோருக்குமே பிடிக்கும். ஷூ அல்லது செருப்புக்கு ரப்பரைப் பயன்படுத்தும் ஐடியா எப்படி வந்தது?
ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அது காலுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று பயன்படுத்தியவர்கள் பிரேசில் மக்கள். அந்தக் காலத்தில் இது எப்படிச் சாத்தியம்? ரப்பரைக் காலில் பயன்படுத்துவதற்காக ஒரு வழியைப் பின்பற்றினார்கள் அவர்கள். மரங்களிலிருந்து ரப்பர் பாலை ஒரு பாத்திரத்தில் சேகரித்தார்கள். அதில் கால்களை நனைத்து, லேசாகச் சூடேற்றி அதைக் காய வைப்பார்கள். ரப்பர் காலோடு ஒட்டிக்கொள்ளும். அதுதான் செருப்பு! ரப்பர் கிழிந்துவிட்டாலோ, தேய்ந்து போனாலோ திரும்பவும் ரப்பர் பாலில் காலை நனைப்பார்கள்!
வெய்ட் வெப்ஸ்டர் என்ற அமெரிக்ககாரர், ரப்பர் ரொம்ப பயனுள்ள பொருள் என்பதை உணர்ந்தார். 1832-ம் ஆண்டில் ரப்பரை ஷூக்களில் பயன்படுத்த காப்புரிமை பெற்றார். இதன் தொடர்ச்சியாக வெப்ஸ்டர் ரப்பர் ஸோல் ஷூவை உருவாக்கினார் அவர். ஆனால், அந்த ஷூக்கள் காலில் ஒட்டிக்கொண்டன அல்லது விரிசல் அடைந்து பிய்ந்துபோயின. எனவே, இது பெரிதாக யாரையும் கவரவில்லை.
1844-ம் ஆண்டில் சார்லஸ் குட்இயர் ரப்பரைக் கொண்டு பல விஷயங்களைச் செய்தார். அவர் ரப்பர் வல்கனைசேஷன் (ரப்பர் ஒட்டிக்கொள்ளாமலும் விரிசல் அடையாமலும் இருக்க உதவும் தொழில்நுட்பம்) முறைக்குக் காப்புரிமை பெற்றார். அப்படி உருவான ரப்பர் ஷூக்களில் பயன்படுத்தப்பட்டன. இந்த வகை ரப்பரில் ஷூ தரமாக இருந்தது. இப்படித்தான் ஷூக்களில் ரப்பரைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் உருவானது.
தகவல் திரட்டியவர்: ஏ. ஹரிணி, 7-ம் வகுப்பு,
அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.