டாம் அண்ட் ஜெர்ரி

டாம் அண்ட் ஜெர்ரி
Updated on
1 min read

குட்டிகளே! உங்கள் வீட்டு உணவுப் பொருட்களை ருசி பார்த்துவிட்டு, உங்களுக்கு பயந்து பதுங்கி ஓடும் எலிகளை கவனித்திருப்பீர்கள். அதேபோல், அசைவ உணவுகளை உங்கள் அம்மா சமைக்கும்போது, வீட்டு வாசற்படியில் நாக்கைச் சுழற்றிக்கொண்டு காத்திருக்கும் பூனைகளும் உங்களுக்கு அறிமுகமானவை தான். தப்பித்து ஓடும் எலிகள் அந்தப் பூனைகளின் கண்களில் பட்டுவிட்டால் போதும், மீனாவது ஒன்றாவது என்று எலியைத் துரத்திக்கொண்டு ஓடிவிடும். இந்தக் காட்சிகளைக் கண்டால் உங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வரும்.

இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கார்ட்டூன் தொடர்தான் ‘டாம் அண்ட் ஜெர்ரி’. 1940களில் ஹாலிவுட்டின் எம்.ஜி.எம்.(மெட்ரோ கோல்டுவின் மேயர்) என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜோஸஃப் பார்பரா, வில்லியம் ஹன்னா என்ற கார்ட்டூன் உலக ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய பாத்திரங்கள்தான் டாம் என்ற பூனையும், ஜெர்ரி என்ற குட்டி எலியும்.

ஒரு பணக்காரப் பெண்மணியின் வளர்ப்பு பிராணியான டாம், அடிப்படையில் சோம்பேறி. கண்ணில் படும் உணவுப் பொருட்களைக் கபளீகரம் பண்ணும் ஜெர்ரியிடமிருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டு. உணவுப் பொருட்களைக் கவர்ந்து செல்லும் ஜெர்ரியை டாம் துரத்திச் செல்லும்போது ஏற்படும் களேபரம்தான் இந்தத் தொடரின் அடிப்படைக் கதை. நடுவில் தங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்காகப் போடும் சண்டைகளும் உண்டு. என்னதான் எதிரிகள் என்றாலும், நாய், எருது போன்ற பொது எதிரிகள் தாக்க வந்தால் இருவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதும், தங்களுக்குள் நட்பு பாராட்டுவதும் நடக்கும். மொத்தத்தில் பரபரப்பான ஓட்டங்கள், சண்டைகளுக்கு நடுவே, நட்பை வலியுறுத்தும் காட்சிகளும் கொண்ட ‘டாம் அண்ட் ஜெர்ரியை’ உங்களைப் போலவே, உலகில் பலருக்கும் பிடிக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in