பறந்து செல்லும் மீன்!

பறந்து செல்லும் மீன்!
Updated on
1 min read

பறவைகள் மட்டுமே பறக்கின்றன என்று நினைத்துவிடாதீர்கள். கடலில் வாழும் ஒரு வகை மீனும் பறக்கிறது. தண்ணீரை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே மீன் துடிக்க ஆரம்பித்துவிடுமே! அப்படி இருக்கையில் இந்த மீன் எப்படிப் பறக்கிறது?

இந்த மீன் ‘எக்ஸோகோடைடே’ (Exocoetidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ‘பறக்கும் மீன்’ என்றே அழைக்கிறார்கள். அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் இவை அதிகம் காணப்படுகின்றன. மீன் நீந்த அதன் துடுப்புகளைப் பயன்படுத்தும் அல்லவா? இந்த மீன் அதைப் பறக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது. இதன் துடுப்புகள் மற்ற மீன்களுக்கு உள்ளது போல் இல்லை. கொஞ்சம் பெரியதாகவும், பறவைகளின் இறகுகள் போலவும் உள்ளன.

அதனால், கடல் மட்டத்திலிருந்து சற்று உயரே எழுந்து இதனால் பறக்க முடிகிறது. இதன் வால் நிமிடத்துக்குச் சுமார் 70 முறை வேகமாக ஆடக்கூடியது. அதனால் வாலையும் துடுப்பையும் சமநிலையில் வைத்துகொண்டு துடுப்பை நன்றாக விரித்துப் பறக்கிறது. அப்படிப் பறக்கும்போது டால்பின் போலத் தண்ணீரிலிருந்து மேலே எழும்பிப் பறக்கிறது. சுமார் 400 மீட்டர் தூரம்வரை இந்த மீனால் பறக்க முடியும். மீண்டும் தண்ணீருக்குள் செல்லும்போது துடுப்புகளைச் சுருக்கிக் கொண்டு உள்ளே சென்றுவிடும்.

பலே மீன் இது!

தகவல் திரட்டியவர்
ஜெ. விக்னேஷ், 9-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in