

விருப்பு வெறுப்பு எல்லாம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மட்டும்தான் சொந்தம் என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால், அதுதான் இல்லை! தாவரங்களிடமும்கூட விருப்பு வெறுப்பு உண்டு. அதற்குச் சில தாவரங்களை உதாரணமாகச் சொல்கிறார்கள் தாவரவியலாளர்கள்.
உதாரணத்துக்கு வெள்ளைப் பூண்டுச் செடிக்கு அருகில் ரோஜா செடி நட்டு வளர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? ரோஜாச் செடி நன்றாக வளர்வதுடன், அதன் பூக்களும் பெரிதாகவும் நல்ல வாசனையுடனும் இருக்கும். பூண்டுச் செடிக்குப் பக்கத்தில் உள்ள ரோஜா செடியைப் பூச்சிகளும் தாக்குவதில்லை. இதற்கு என்ன காரணம் என்றுதானே யோசிக்கிறீர்கள்?
அதாவது, வெள்ளைப் பூண்டுச் செடியின் வேர்களிலிருந்து சுரக்கும் ஒரு வகை நீரை, பக்கத்தில் உள்ள ரோஜாச் செடியின் வேர்கள் உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால்தான் ரோஜாச் செடிக்கு அதிக பலமும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. இதன் காரணமாகப் பூண்டும் ரோஜாவும் நேசம் கொள்கின்றன.
பூண்டும் ரோஜாவும் இப்படியென்றால், முட்டைக்கோஸும் பீன்ஸும் நேர்மாறாக உள்ளன. இவை இரண்டும் வேறு உணர்ச்சிகளைக் காண்பிக்கின்றன. வெள்ளைப் பூண்டுக்கு அருகே இச்செடிகளை நட்டால், இவற்றின் வளர்ச்சி தடைபட்டு நலிந்துவிடுகின்றன.
ரூ என்றொரு செடி உள்ளது. இதனை வீடுகளில் ஜன்னல் பக்கம் வளர்த்தால் ஈக்கள் உள்படச் சில பூச்சிகள் வீட்டுக்குள் நுழையாது. ஆனால், இந்தச் செடிக்கும் மற்றச் செடிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. மற்ற தாவரங்களை வெறுக்கும் இந்தச் செடிக்கு, அத்தியை மட்டும் ரொம்பப் பிடிக்குமாம். இந்தச் செடியின் பக்கத்தில் அத்தியை வளர்த்தால் அது நன்றாக வளர்ந்துவிடும்.
இப்படிச் சில செடிகளுக்கு விருப்புவெறுப்பு இருந்தாலும், அதற்கான முழுமையான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!
தகவல் திரட்டியவர்: அ. பாலமுருகன், 9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.