

தேவையான பொருட்கள்
பழுப்பு நிறக் காகிதப் பை, தடிமனான அட்டை, பச்சை மற்றும் சிவப்பு நிற வழுவழு தாள், கத்தரிக்கோல், பசை.
செய்முறை
1.காகிதப் பையின் அடிப்பாகத்தைப் படத்தில் காட்டியிருப்பது போல மடித்து, சமப்படுத்தவும். அது மீண்டும் பழைய மாதிரிச் சுருட்டிக்கொள்ளாதவாறு பசை மூலம் ஒட்டிவிடவும். இதுதான் தவளையின் தலை. காகிதப்பையின் மீதமுள்ள பகுதி, தவளையின் உடலாக இருக்கும்.
2.பச்சை நிற வழுவழு தாளைத் தடிமனான அட்டையில் ஒட்டவும். அதில் படத்தில் உள்ளதுபோல இரண்டு கண்களை வரைந்து வெட்டவும். வெட்டியதை, தவளையின் தலைப் பகுதியில் ஒட்டவும். கண்ணின் கருவிழிக்குக் கறுப்பு நிறத்தையும், அதைச் சுற்றி வெள்ளை நிறத்தையும் பூசவும்.
3.இதேபோல இரண்டு குட்டைக் கைகளையும், இரண்டு நீளக் கால்களையும் அட்டையில் ஒட்டிய வழுவழு தாளில் வரைந்து வெட்டவும். அவற்றைத் தவளையின் உடலில் சரியான இடங்களில் ஒட்டவும்.
4.சிவப்பு நிற வழுவழு தாளில் நீளமான நாக்கு போல வரைந்து, அதைத் தவளையின் தலையுடன் சேர்த்து ஒட்டவும்.
5.இப்போது பச்சை நிற வழுவழு தாளில் சின்னச்சின்ன வட்டங்களை வரைந்து வெட்டவும். அவற்றைத் தவளையின் உடல் முழுவதும் ஒட்டவும்.
பச்சைப் பசேலென்ற கண்ணைக் கவரும் இந்தத் தவளை, உங்கள் நண்பர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும்.