

நாய், பூனை, காக்காய், பல்லி, ஆடு, மாடு போன்றவற்றை நம் வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ பார்க்க முடியும். ஆனால் பரந்து விரிந்த இந்த உலகில், குறிப்பாகக் காடுகளில் ஆயிரக்கணக்கான உயிரின வகைகள் நம்மைச் சுற்றி வாழ்ந்து வருகின்றன. அந்த உயிரினங்களையும், அவற்றின் வாழ்க்கையையும், உலகம் செழிக்க அவை ஆற்றும் பங்கையும் புரிந்துகொள்ளும் போதே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
உயிரினங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாளை முதல் அக்டோபர் 8-ம் தேதிவரை தேசியக் காட்டுயிர் வாரம் அனுசரிக்கப்படுகிறது. சரி, உயிரினங்களை நெருக்கமாக எப்படி அறிந்துகொள்வது? தமிழகம் முழுவதும் உயிரினங்களை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் முக்கியமான இடங்கள்:
வண்டலூர் விலங்கு காட்சி சாலை
இந்தியாவின் முதல் விலங்கு காட்சிசாலை இதுதான். சிங்கம், புலி, கருஞ்சிறுத்தை, கழுதைப்புலி, ஒட்டகச்சிவிங்கி, நீர்நாய் போன்றவற்றை இங்கே பார்க்கலாம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, தவளை இல்லம், குரங்கு இல்லம், அணில் இல்லம், இரவாடிகள் உலகம் போன்றவை சுவாரசியமான பகுதிகள். சிங்கம், காட்டெருது போன்றவை வாழும் பகுதிகளைச் சுற்றிக் காட்டும் தனிச் சஃபாரியும் உண்டு.
நட்சத்திர உயிரினங்கள்: வெள்ளைப்புலி, சிம்பன்சி குரங்கு
வேடந்தாங்கல் இந்தியாவின் பழமையான பறவைகள் சரணாலயம். இந்த ஊர் மக்கள் இங்குள்ள ஏரிக்கு வரும் நீர்ப்பறவைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வருகிறார்கள். நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து ஜனவரி இறுதிவரை ஒவ்வொரு சீசனுக்கும் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கே வருகின்றன. நாரைகள், கொக்குகள், நீர்க்காகங்கள், வெளிநாட்டு வாத்துகளை இங்கே பார்க்கலாம்.
நட்சத்திரப் பறவைகள்: மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா, கரண்டிவாயன், அரிவாள்மூக்கன்
முதுமலை புலிகள் சரணாலயம்
இங்குப் புலிதான் ஸ்பெஷல். குளிர் மிகுந்த நீலகிரி மலைப் பகுதியில் கேரளம், கர்நாடகம், தமிழக எல்லைகள் சந்திக்கும் மிகப் பெரிய காடு உள்ள பகுதி. கரடி, செந்நாய், மந்தி, பிணந்தின்னிக் கழுகுகள் போன்ற உயிரினங்கள் இயற்கையாக வாழும் காடு. இங்கு யானையின் மீது ஜம்மென்று சவாரி செய்து உயிரினங்களைப் பார்க்கலாம்.
நட்சத்திர உயிரினங்கள்: யானை, காட்டெருது, சிறுத்தை
கிண்டி சிறுவர் பூங்கா
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதன் பேரில் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான உயிரினப் பூங்கா இது. ஆரம்பத்தில் புள்ளிமான் பூங்காவாகவே தொடங்கப்பட்டது. பிறகு நிறைய உயிரினங்கள் சேர்க்கப்பட்டன. நீர்நாய், நரி, முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை, கடமான் போன்றவற்றைப் பார்க்கலாம். 2 கோடி ஆண்டு பழமையான மரத்தின் புதைபடிமம் இங்கே உள்ளது.
நட்சத்திர உயிரினங்கள்: வெளிமான், நட்சத்திர ஆமைகள்.
சென்னை பாம்புப் பண்ணை
புகழ்பெற்ற ஊர்வன ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேகர் தொடங்கிய இந்தியாவின் முதல் ஊர்வன பூங்கா. நல்ல பாம்பு, விரியன் வகை பாம்புகள், ஆமைகள் போன்றவை கண்ணைக் கவரும். இங்கே மலைப்பாம்பு இனப்பெருக்கமும் நடக்கிறது.
நட்சத்திர உயிரினங்கள்: பச்சோந்தி, மலைப்பாம்பு
கூந்தங்குளம்
முழுக்க முழுக்க உள்ளூர் மக்களால் பாதுகாக்கப்படும் இந்தப் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலி-திசையன்விளை சாலையில் உள்ளது. வெளிநாட்டு பறவைகள் உட்பட லட்சக்கணக்கான பறவைகள் இங்கே வருகின்றன. தென்னிந்தியாவில் நீர்ப்பறவைகள் அதிக இனப்பெருக்கம் செய்யும் இடம். கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை உள்ளிட்ட பறவைகளைப் பார்க்கலாம்.
நட்சத்திரப் பறவை: இமய மலையைத் தாண்டி வரும் பட்டைத்தலை வாத்து
சென்னை முதலைப் பண்ணை
கரியல், உப்புநீர் முதலை, சதுப்புநில முதலை ஆகிய முதலை வகைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்டது இந்த மையம். ஆசியாவின் முதல் முதலை இனப்பெருக்க மையம் இது. உலகிலுள்ள 23 முதலை வகைகளில் 14 வகைகள் இங்கே உள்ளன. இந்தியாவில் முதலைகள் அதிகம் வாழும் இடமும் இதுதான். இந்த மையம் அமைந்துள்ள கடற்கரையில் பங்குனி ஆமைகளும் இயற்கையாக இனப்பெருக்கம் செய்கின்றன.
நட்சத்திர உயிரினங்கள்: உடும்பு, பச்சோந்தி
கோடியக்கரை
‘இந்தியாவின் அழகான உயிரினங்களில் ஒன்றான வெளிமான், இயற்கையாக வாழுமிடம். அத்துடன் அக்டோபர்-ஜனவரி மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் இடம். மண்வெட்டி போன்ற வாய், நீண்ட கழுத்து, நீண்ட கால் கொண்ட கவர்ச்சிகரமான ரோஸ் நிறப் பறவையான பூநாரைகள்தான் இங்கே ஸ்பெஷல். கடல்காகம், வாத்துகளையும் நிறைய பார்க்கலாம்.
நட்சத்திர உயிரினங்கள்: காட்டுப் பன்றி, குதிரைகள்