

“உலகின் மிகப் பெரிய நாவலை எழுதியவர் யார்னு தெரியுமா?” என்று நேயாவைப் பார்த்தவுடன் கேட்டது புத்தகப் புழு.
“உலகத்தின் பெரிய நாவலா, அது எனக்குத் தெரியாலையே. நான் அவ்வளவு அதிகமா படிக்கலையே.” என்றாள் நேயா.
“நானும் அந்த அளவுக்குப் படிக்கிற ஆள் இல்லைதான். ஆனா, நூலகங்களுக்குள்ளேயே சுத்துறதுனால, அந்த நாவலை நான் பார்த்திருக்கேன். அது ரொம்பப் பெரிசு, தமிழ்லகூட வந்திருக்கு”.
“ஓ, அப்படியா! அந்த நாவலை எழுதியவர் யார்?”
“ரஷ்யாவைச் சேர்ந்த டால்ஸ்டாய் தாத்தாதான். அவரை உனக்குத் தெரியுமா?”
“கொஞ்சமா ஞாபகம் இருக்கு, சார்லஸ் டார்வின் மாதிரி நீளமா தாடி வச்சிக்கிட்டு இருப்பாரே, அவரைத்தான் சொல்றியா?”
“ஆமா, அவரேதான். அவரோட 188-வது பிறந்தநாள் செப்டம்பர் 9-ம் தேதி வருது.”
“சரி, இப்போ எதுக்கு அவரைப் பத்தி?”
“இருக்கே. ஆடு மேய்க்கும் சிறுவன் புலி வருது, புலி வருதுன்னு பொய்யாச் சொன்னது, காட்டில் கரடியைச் சந்தித்த இரண்டு நண்பர்களில் ஒருத்தன் மட்டும் மரத்தில் ஏறிக்கிட்டது, எறும்பைக் காப்பாற்றிய புறாவும் புறாவைக் காப்பாற்றிய எறும்பும் என்பது போன்ற உலகப் புகழ்பெற்ற குழந்தைக் கதைகளை அவர் எழுதியிருக்கார்.”
“ஆனா, அந்தக் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள்ல வர்றதுதானே புழு.”
“உண்மைதான், ஆனா ஈசாப் நீதிக் கதைகளை டால்ஸ்டாய் மேம்படுத்தி எழுதியதால்தான் அந்தக் கதைகள் பிரபலமாகின.”
“இப்போ எங்க அப்பா சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருது. சின்ன வயசுல, கோட்டு ஓவியங்கள் வரைந்த பெரிய டால்ஸ்டாய் கதைப் புத்தகம் ஒண்ணு படிச்சாராம். அதிலேர்ந்து சில கதைகளை தூங்க வைக்கும்போது அப்பா எனக்குச் சொல்லியிருக்கார்.
அந்தப் புத்தகம் ரொம்ப அழகா இருக்கும். அதிலிருக்கும் ஓவியங்கள் எளிமையாவும் நேர்த்தியாகவும் இருக்கும்னு அப்பா சொன்னார். ஆனா, அதை அவர் ரொம்ப நாளைக்கு முன்னாலயே தொலைச்சிட்டார்”.
“பரவாயில்ல, டால்ஸ்டாயோட குட்டிக் கதைகள் புத்தகம் இப்போ தமிழ்ல வந்திருக்கு. இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கொ.மா.கோ. இளங்கோ.”
“அப்ப இவ்வளவு காலமா தமிழ்ல அந்தக் கதைகள் வரலையா?”
“இப்பவாவது வந்ததேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். எல்லாமே குட்டிக் குட்டிக் கதைகள். குழந்தைகளின் வாழ்க்கையில் சாதாரணமா நடைபெறும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை பல கதைகள். 150 ஆண்டுகளைத் தாண்டியும் அந்த அனுபவங்களில் சில மாறவேயில்லை.”
“இந்தப் புத்தகத்தில் உனக்குப் பிடித்த கதை எது?”
“எனக்குப் பிடித்தது ‘சின்னஞ்சிறிய பறவை’ என்கிற கதை. சிஸ்கின் என்கிற பாடும் பறவையை ஸெர்யோஷா என்ற சிறுவன் கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அதைக் கூண்டில் அடைக்க வேண்டாம் என்று அம்மா சொன்னதை அவன் கேட்கவில்லை. அந்தக் கதையின் கடைசியில் இனிமேல் எந்தப் பறவையையும் பிடித்து வளர்ப்பதில்லை என்று அவன் முடிவெடுக்கிறான். அப்படி அவன் முடிவெடுப்பதற்கு என்ன காரணம் என்பதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் டால்ஸ்டாய். அதேபோல, நாய்க்குட்டியைப் பாசத்தோடு வளர்த்த சிங்கம் பற்றிய கதையும் வித்தியாசமானது.”
“நாய்க்குட்டியை வளர்த்த சிங்கமா, ஆச்சரியமா இருக்கே”
“அதேநேரம், இந்தக் கதைகளில் உயிரினங்கள் சார்ந்து கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘சிட்டுக்குருவியும் தூக்கணாங்குருவியும்’ என்ற கதை அறிவியல் புரிதலுக்கு எதிரா இருக்கு. அது மட்டுமில்லாம ஆங்கிலத்துல Swallow-ங்கிற பறவையைப் பத்தி டால்ஸ்டாய் சொல்லியிருக்கார். அது இந்தியாவுக்கு வலசைவரும் தகைவிலான் பறவை. தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது இது தவறா தூக்கணாங்குருவின்னு ஆகியிருக்கு.”
“ஓஹோ”
“அப்புறம் உங்க அப்பா சொன்ன அந்தப் புத்தகத்துல இருக்கிற ஓவியங்களை வரைந்தவர் ஏ. பாகோமோவ். அந்த ஓவியங்கள் இந்தப் புத்தகத்துலயும் இருக்கு.”
“அப்படியா, அப்ப நிச்சயமா அந்தப் புத்தகத்த வாங்கி, அப்பாவுக்குப் பரிசாத் தரப்போறேன் புழு.” என்றாள் நேயா.
குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள், லியோ டால்ஸ்டாய்,
தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், 7,
இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. தொலைபேசி: 044-2433 2424