

விந்தையான நிகழ்வுகளுக்கு உலகில் பஞ்சமே இல்லை. வரலாற்றில் பல விந்தையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில சுவாரசியமான சம்பவங்களைப் பார்ப்போமா?
# கி.பி. 1739-ம் ஆண்டு ஸ்பெயின் மீது இங்கிலாந்து போர் தொடுத்தது. ஏன் தெரியுமா? ‘ஜெங்கின்ஸ்’ என்ற கப்பல் தலைவனின் காதை ஸ்பெயின் கப்பல் படையினர் நடுக்கடலில் துண்டித்துவிட்டார்கள். அறுந்து விழுந்த தன் காதைப் பத்திரமாக எடுத்துக்கொண்ட ஜெங்கின்ஸ், அதை ஒரு பெட்டியில் வைத்து இங்கிலாந்துக்குக்குக் கொண்டு வந்தார். அதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் காட்டி முறையிட்டார் ஜெங்கின்ஸ். இந்தப் பிரச்சினை பின்னர் போராக மாறியது. இந்தப் போருக்கு ‘ஜெங்கின்ஸ் காது சண்டை’ என்று பெயர்.
# முதல் உலகப்போரின் தொடக்கத்தில் பிரான்ஸ் அரசு தனது படைகளைப் போருக்கு அனுப்பியது. ஆனால், தனது படைகள் முழுவதையும் அனுப்பப் போதிய டாங்கர் லாரிகள் இல்லை. அதனால், 12,000 டாக்ஸிகளை வாடகைக்குப் பிடித்து அவற்றில் போர் வீரர்களை ஏற்றிப் போருக்கு அனுப்பி வைத்தது அந்த நாடு.
# அந்தக் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்குப் புறாக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. முதல் உலகப் போரில் பிரான்ஸ் நாட்டின் போர் முனையிலிருந்து செய்தியைக் கொண்டுவரவும், போர்முனைக்குச் செய்தியை அனுப்பவும் பல புறாக்கள் அனுப்பப்பட்டன. அதில் ஒரு புறாவுக்குப் போர் முடிந்த பின், அதன் சேவையைப் பாராட்டிப் பதக்கம் வழங்கப்பட்டது.
# மிகமிகச் சிறிய வயதில் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்டு. வேல்ஸ் நாட்டின் இளவரசராக 1841-ம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். அப்போது அந்த இளவரசர் பிறந்து 29 நாட்கள்தான் ஆகியிருந்தது!
# பிரான்செல்டான் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்த பெரிய பணக்காரர். இவர் பாஸ்டில் சிறையில் 69 ஆண்டுகள் அடைபட்டுக்கிடந்தார். ஏன் தெரியுமா? 14-ம் லூயி மன்னனின் வழுக்கைத் தலையைப் பார்த்து இவர் சிரித்ததுதான் காரணம்.
தகவல் திரட்டியவர்:
பி. சுசீந்திரன், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிறுமுகை.