Last Updated : 12 Oct, 2016 11:46 AM

 

Published : 12 Oct 2016 11:46 AM
Last Updated : 12 Oct 2016 11:46 AM

தினுசு தினுசா விளையாட்டு: கண்ணாமூச்சி ரே...ரே...

‘கொல கொலயா முந்திரிக்கா…’ விளையாட்டைப் படிச்சிட்டு, அந்த விளையாட்டை விளையாடி பார்த்திருப்பீர்கள். நீங்க விளையாடுவதை வீட்டில் உள்ள பெரியவர்களும் ரசித்துப் பார்த்திருப்பார்கள். சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு…

‘கண்ணாமூச்சி ரே…ரே…!’.

சின்ன வயதில் இந்த விளையாட்டை விளையாடாத குழந்தைகளே இருந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடித்த விளையாட்டு இது. சின்னக் குழந்தைகள், பெரிய குழந்தைகள் என்று வேறுபாடு இல்லாமல் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொண்டு விளையாடலாம்.

இந்த விளையாட்டை ஆரம்பிக்கும் முன், யார் முதலில் கண்ணைப் பொத்திக்கொள்வது என்பதற்காக ஒரு சிறிய ஒரு விளையாட்டும் உள்ளது. அதுதான் ‘சாட்…பூட்…திரி..!’

# இந்த விளையாட்டில் கலந்துகொள்ளப் போகும் எல்லோரும் வட்டமாக நிற்க வேண்டும்.

# எல்லோரும் ஒரே நேரத்தில், ஒரே குரலில் சேர்ந்து சத்தமாகச் சொல்ல வேண்டும். என்ன ரெடியா? ‘சாட்… பூட்… திரி…!’

அப்படிச் சொல்லிக்கொண்டே, ‘திரி’ என்று முடிக்கும்போது, ஒவ்வொருத்தரும் அவர்களுடைய இடது கை மேலே வலது கையை வைக்க வேண்டும். இடது உள்ளங்கை மேலே வலது உள்ளங்கை படுவது போலவும் வைக்கலாம். இல்லாவிட்டால், இடது உள்ளங்கை மேலே வலது கையோட புறங்கை படுவது போலவும் வைக்கலாம்.

ஒரே மாதிரி கையை வைத்திருப்பவர்கள் நிறைய பேர் இருந்தால், அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெளியேறிவிட வேண்டும். ஒரே மாதிரி கையை வைத்திருந்தவர்கள் திரும்பவும் விளையாட வேண்டும். இப்படி கொஞ்சம்கொஞ்சம் பேராக வெளியேறி விடுவார்கள். கடைசியாக மிஞ்சும் இரண்டு பேருடன், கூடுதலாக இன்னொருத்தரும் சேர்ந்து, திரும்ப ‘சாட்… பூட்… திரி…!’ போட வேண்டும்.

# இதில், கடைசியாக மிஞ்சுபவர்களுடன் கண்ணை, யாராவது ஒருத்தர் ரெண்டு கையாலேயும் பொத்துவார்கள்

# மற்றவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கமாக ஓடிப்போய் ஒளிந்துகொள்ள வேண்டும்.

‘கண்ணாமூச்சி ரே… ரே…

காதறுப்பான் ரே… ரே…

நல்ல முட்டையைத் தின்னுப்புட்டு

கெட்ட முட்டையக் கொண்டு வா…!’

அப்படிப் பாடிக்கொண்டே, பொத்தியிருக்கும் கண்ணைத் திறந்து விடுவார்கள். மற்றவர்கள் எல்லாம் ஓடி ஒளிந்துகொள்வார்கள். ஒவ்வொருவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்குள்ளே, அவர்கள் கண்ணைப் பொத்திவிட்டவரை ஓடி வந்து தொட்டுவிட வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் ‘அவுட்’. அப்படியில்லையென்றால், கண்ணைப் பொத்தியிருந்தவர் ஒளிந்திருந்தவர்களைத் தொட்டுவிட்டால் அவர்கள் ‘அவுட்’. இதுல யார் ‘அவுட்’ ஆனார்களோ, அவங்க கண்ணைப் பொத்திக்கொண்டு, மறுபடியும் இந்த விளையாட்டைத் தொடரலாம்.

எங்கே விளையாடுகிறீர்களா? “கண்ணாமூச்சி ரே…ரே…”

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x