இந்த மிட்டாயை உங்களுக்குத் தெரியுமா?

இந்த மிட்டாயை உங்களுக்குத் தெரியுமா?
Updated on
1 min read

தின்பண்டங்கள் என்றாலே வண்ண வண்ணக் காகித உறைகளுக்குள் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றே உங்களில் பலர் நினைத்திருப்பீர்கள். காரணம் எந்தக் கடைக்குச் சென்றாலும் இவைதான் உங்கள் கண்ணில் படும்.

உங்கள் அப்பா, அம்மா காலத்தில் இதுபோன்ற பாக்கெட் எதுவும் இல்லை. பள்ளிக்கூட வாசலில் கறுப்புக்குடை பிடித்தபடி ஒரு பாட்டியம்மா உட்கார்ந்திருப்பார். அவர் முன்னால் ஒரு மரப்பெட்டி இருக்கும். அதில் நிறைய தின்பண்டங்கள் இருக்கும். அவற்றை அவர் விற்பார். இப்படிப்பட்ட பாட்டிமார்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.

இது தவிர, வண்டியைத் தள்ளிக்கொண்டு வரும் வியாபாரிகளும் இருந்தார்கள். அவர்களும் வண்டி வண்டியாக நிறைய தின்பண்டங்களைக் கொண்டுவருவார்கள்.

இப்போது அந்த மாதிரி பாட்டிகளும் இல்லை, வண்டிகளும் இல்லை, பண்டங்களும் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் காண்டீன் இருக்கிறது. அதற்கு வசதியில்லாத பள்ளிகளில் மாணவர்கள், தங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் கடைகளுக்குப் படையெடுக்கிறார்கள்.

அந்தக் காலத்திலும் வகுப்பு இடைவேளையில் இதே வேகத்துடன் மாணவர்கள் திண்பண்டங்களை வாங்கிச் சுவைத்தார்கள். அவற்றின் சுவை அதிகம், விலை குறைவு. பெரும்பாலும் அவை வீட்டில் செய்யப்பட்டவையாக இருக்கும். எலந்தம்பழம், நெல்லிக்காய் போன்றவையும் இருக்கும். சுவையூட்டிகளும், நிறமூட்டிகளும் அதிகம் இருக்காது.

தேன் மிட்டாய், கடலை மிட்டாய், கமர்கட், மாத்திரை மிட்டாய், ஜவ்வு மிட்டாய், இலந்தை வடை, நாவல்பழம், கலாக்காய், மாங்காய் பத்தை என்று இனிப்பும், புளிப்பும் நிறைந்த பலப் பல பண்டங்கள் சாப்பிடக் கிடைக்கும்.

பாக்கெட்டுகளில் அடைத்த உணவுப் பண்டங்களைவிட வீட்டிலேயே தயாராகும் கடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தரும்படி மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

நீங்களும் வீட்டிலேயே செய்யப்படும் பண்டங்களைச் சுவைக்கலாமே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in