

யூகடான் தீபகற்பம். இது மத்திய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவையும் கரீபியன் கடலையும் பிரிக்கும் நிலப்பகுதி இது. 1,97,600 ச.கி.மீ பரப்பளவு உள்ள இந்தக் கடலோரப் பகுதி, அழகிய கடற்கரைகளைக் கொண்டது. சில மர்மங்கள் நிறைந்த பகுதியும்கூட.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மாயன் இனத்தவர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது இங்கேதான். அந்த இனத்தவரின் மிச்சச் சொச்சங்கள் இந்த யூகடான் கடற்கரைகளில் காணப்படுகின்றன. இங்கே கடலுக்குள் 300 அடி ஆழத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைகள் இருக்கின்றன. அவற்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்தக் குகைகளில் கான்கிரீட் பாதைகள், மனித உருவச் சிற்பங்கள்கூட இருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளும்கூட இங்கே உள்ளன. நிலப்பகுதியை விட்டுவிட்டு, எதற்காக அந்தக் கால மனிதர்கள் கடலுக்குள் குகைகளை அமைத்தனர் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஒரு வேளை மாயன்கள் கல்லறைகளுக்காக இந்தக் குகையை அமைத்திருப்பார்களோ என்றெல்லாம்கூட ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இந்தக் குகைகளில் மனித எலும்புகள் மட்டுமில்லாமல், விநோத விலங்குகளின் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன. இப்படி ஏராளமான தொல்பொருள் எச்சங்கள் யூகடான் கடற்கரைப் பகுதியில் கிடைத்தாலும், எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கவில்லை. எல்லாமே பல ஆண்டுகளாக ஆய்வு நிலையிலேயே இருக்கின்றன. யூகடான் கடற்கரை ஆராய்ச்சிகள் சந்தேகங்களுக்கு விடையை அளிக்குமா எனக் காலம்தான் பதில் சொல்லும்!
தகவல் திரட்டியவர்
ஆர். மகேந்திரன், 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.