

# முக்கனிகளில் முதன்மையான கனி மா. வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படும் பழங்களில் மாவும் ஒன்று. தெற்கு ஆசியாவிலுள்ள இந்தியா, பர்மா, அந்தமான் பகுதிகளில் அதிகம் விளைகிறது மா. இந்தியாவில் விளையும் மாஞ்சிஃபெர்ரா இண்டிகா என்ற மா வகையே உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
# 35 முதல் 40 மீட்டர் உயரம் வரை மா மரம் வளரும். நீண்ட காலம் வாழக்கூடியது. சில வகை மா மரங்கள் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கின்றன. மாம்பழங்கள் பலவித அளவுகளிலும் உருவங்களிலும் காணப்படுகின்றன. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை நிறங்களில் மாம்பழங்கள் கிடைக்கின்றன.
# மாங்காயில் வைட்டமின் சியும் மாம்பழத்தில் வைட்டமின் ஏயும் அதிகம் இருக்கின்றன. மாங்காய்களில் ஊறுகாய், பச்சடி, சட்னி போன்றவை செய்யப்படுகின்றன. மாம்பழங்களை அப்படியே சாப்பிடவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மாம்பழங்களிலிருந்து பழச்சாறு, ஜாம் போன்றவையும் தயாராகின்றன. மா இலைகள் பண்டிகைக்காலங்களில் தோரணமாகக் கட்டப்படுகின்றன.
# உலகில் விளைவிக்கப்படும் மாம்பழங்களில் பாதியளவு இந்தியாவில் விளைகிறது. உள்நாட்டிலேயே மாம்பழங்களை அதிகம் பயன்படுத்திக்கொள்வதால், குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
# இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளின் தேசியப் பழம் மா. துணிகளில் மா வடிவமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. யாராவது ஒரு கூடை மாம்பழங்களைக் கொடுத்தால், உங்களிடம் நட்பு கொள்ள நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.