Last Updated : 20 Jan, 2016 11:21 AM

 

Published : 20 Jan 2016 11:21 AM
Last Updated : 20 Jan 2016 11:21 AM

பசுமைப் பள்ளி 18: வெப்பம் தணிப்போம்

நண்பகல்… அதாவது, சிறுபொழுதானது பத்து முதல் இரண்டு மணி வரையுள்ள நேரமாகும். ஒரு மாட்டின் மேல் அமர்ந்திருந்த கரிச்சான் குருவியொன்று பறந்து சென்று ஒரு பூச்சியைப் பிடித்தது. திரும்பவும் மாட்டின் மீது வந்து அமர்ந்தது. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் பசுமைப் பள்ளியின் குழந்தைகள். ஆனால், வாட்டும் வெயிலில் அவர்களுக்கு வியர்த்தது.

இப்போது அடுத்த பூதமான தீயைப் பற்றிய பாடம். “என்ன பொருத்தமான நேரம்!” என முணுமுணுத்தான் வண்ணன்.

“ஆமாம். பொருத்தமான நேரம்தான். தீ என்றால் வெப்பம்தானே, இல்லையா குழந்தைகளே!” என்று சிரித்தது சூரியன் எனும் ஞாயிறு.

“அதற்காக இவ்வளவு வெப்பமா?” என்றான் வண்ணன்.

“வெப்ப மண்டலத்துக் குழந்தைகள் இப்படிச் சொல்லலாமா? மனித உடலில் இருக்கும் வெப்பம் முழுமையாகப் போய்விட்டால், அப்புறம் அந்த உடலுக்குப் பிணம் என்று பெயர் வந்துவிடுமே. ஆகவே, வெப்பம் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் குழந்தைகளே!” என்றது ஞாயிறு.

குழந்தைகள் மேலும் கேட்க ஆர்வமானார்கள்.

“மனிதரின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எது தெரியுமா? தீ மூட்டக் கற்றுக்கொண்டதுதான். அதிலிருந்துதான் படிப்படியாக வெப்ப ஆற்றலைப்பயன்படுத்தும் திறமையை வளர்த்துக் கொண்டார்கள். கடைசியில் இது புவியையே கொளுத்துவதில் போய் முடிந்திருக்கிறது” என்றது ஞாயிறு.

“புவி வெப்பமாதலைப் பற்றித்தானே சொல்கிறாய்?” எனக் கேட்டார்கள் பசுமைப் பள்ளியின் குழந்தைகள்.

“ஆமாம், புவிவெப்பம் கூடியதற்குக் காரணம் மனிதர்கள் புவியிலிருந்து வெளியேற்றிய பசுமை இல்ல வளிகள்தான் (வாயுக்கள்). ஆனால், புவி வெப்பமாகிவிட்டது என்று பழியை அப்பாவிப் புவிமேல் போடுகிறார்கள்” என்று சிரித்தது ஞாயிறு.

“ஒத்துக்கொள்கிறோம். புவியின் வெப்பம் இன்னும் இரண்டு பாகை (டிகிரி) அதிகரித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்கிறார்களே? அப்படி என்னென்ன விளைவுகள் ஏற்படும்?”

“தமிழகத்தைப் பற்றி மட்டும் சொல்கிறேன், கேளுங்கள். பருவமழை தவறுதல், காலமற்ற காலத்தில் கடும் மழை, புயல் ஆகியவை ஏற்படும். தவிர வெப்பக் காலமும் நீளலாம். அப்போது என்னைத்தான் நீங்கள் குறை சொல்வீர்கள்”.

“இப்போது எங்களுக்குப் புரிகிறது. வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?”

“கடலோர மாவட்டங்கள் பலவற்றின் ஊர்கள் கடலுக்குள் மூழ்கிவிடும்”.

“ஓ… மாலத்தீவுகள் மூழ்கிவிடும் என்பார்களே, அதுபோலவா?” என்றான் வண்ணன்.

“மாலத்தீவு கிடக்கட்டும். தமிழ்நாட்டுக் கடலில் இருந்த விலாங்குச் சல்லி, பூவரசன்பட்டி என்கிற இரு தீவுகள் ஏற்கெனவே மூழ்கிவிட்டன என்பது தெரியுமா?”

குழந்தைகள் தெரியாது என்று வியப்புடன் தலையசைத்தனர்.

“கடைசியாக ஒன்று சொல்லி முடிக்கிறேன். புவி வெப்பம் கூடினால் புவி அழியாது. அழியப்போவது மனிதர்கள்தான். இதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பசுமைப் பள்ளியின் குழந்தைகளான நீங்கள்தான், மற்ற மனிதர்களுக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டும்”.

“புரிகிறது. மனிதர்கள் இல்லாமல் புவி வாழும்”.

“சரியாகப் புரிந்துக்கொண்டீர்கள் குழந்தைகளே! இதற்குப் பரிசாக உங்கள் புழுக்கத்தைச் சிறிது குறைக்கிறேன்” என்று சொல்லிய ஞாயிறு முகிலுக்குள் மறைந்து கொண்டது.

(அடுத்தது: நன்னீர் நன்று)

கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x