

கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஏராளமான சாதனைகள் தொகுக்கப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. 2017-ம் ஆண்டுக்கான சாதனை புத்தகத்தில் குழந்தைகள் பிரிவில் நிறைய சாதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாதனையும் ஒவ்வொரு வகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?
வயதான கடல் பசு
உலகிலேயே மிகவும் வயதான ஆவுனியா (Dugong) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது. ஸ்னூட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் ஆவுனியாவின் வயது 68 ஆண்டுகள்.
சாகச கக்கரம்
வெறும் சக்கரத்தைக் கொண்டு வண்டி ஓட்ட முடியுமா? ‘முடியும்’ என்று சாதித்திருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த கெவின் ஸ்காட். மோனோவீல் என்றழைக்கப்படும் சக்கரத்தில் உட்கார்ந்தபடி இவர் மணிக்கு 98 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறார்.
வானளாவிய வாய்
சிலர் வாயைத் திறந்தாலே, அண்ட சராசரமும் தெரிகிறது என்று கேலி செய்வார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த பெர்ன்ட் ஸ்மிட் வாயும் அந்த ரகம்தான். இவர் வாயைத் திறந்தால் 8.8. செ.மீ. அளவுக்கு இருக்கிறது. அதில் ஒரு ஆப்பிள் பழத்தைக்கூட சர்வ சாதாரணமாக நுழைத்துவிடுகிறார் இந்த மனிதர்.