வாசிப்பை வசப்படுத்துவோம்: உருவங்கள் மாறும் மாயாஜாலக் குரங்கு

வாசிப்பை வசப்படுத்துவோம்: உருவங்கள் மாறும் மாயாஜாலக் குரங்கு
Updated on
2 min read

சீனாவும் நம்மைப் போன்ற நெடிய பாரம்பரியம் கொண்ட ஆசிய நாடு என்பதால், அங்கே பாரம்பரியக் கலைகளுக்கும் கதைகளுக்கும் குறைவே இல்லை. மூன்று சீனக் கதைப் புத்தகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஸன் வூ கோங்

மாய சக்திகள் நிறைந்த ஒரு குரங்கு, காட்டில் ஒரு குரங்குக் கூட்டத்துக்கு அரசனாகிறது. சாகாவரம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடிச் செல்லும் அந்தக் குரங்கு, பூடி என்ற ஆசானிடம் பயிற்சி பெறுவதற்குச் சேர்கிறது. இந்தப் பயிற்சிகள் 'குங்ஃபூ பாண்டா' படத்தில் வரும் பயிற்சிகளைப்போலக் கட்டுக்கோப்பு நிறைந்தவையாக இருக்கின்றன. அந்தக் குரங்கு ‘ஸன் வூ கோங்' என்ற புதிய அவதாரம் எடுக்கிறது.

இப்போது உருவத்தை மாற்றிக்கொள்ள உதவும் 72 மாயாஜால வித்தைகளும் உலகைச் சுற்றிவர உதவும் குட்டிக்கரணமும் அந்தக் குரங்குக்குத் தெரியும். அந்தக் குரங்குதான் உலகிலேயே மிகவும் பலசாலி. எவ்வளவு பலசாலி என்றால் டிராகனிடம் (கடல்நாக அரசன்) சென்று, தன் குரங்குக் கூட்டத்தைக் காப்பாற்ற உலகிலேயே வலுவான ஆயுதத்தைக் கேட்கிறான். பிறகு அந்தப் பிரம்மாண்ட ஆயுதத்தை மிகவும் நுண்ணியதாக்கித் தன் காதுக்குள் மறைத்து வைத்துக்கொள்கிறான்.

அதன் பிறகு சொர்க்கம், மற்ற கடவுள்களுடன் சதா சண்டையிடுவதே அவனுடைய தொழிலாகிறது. நொடிக்கு ஒரு தரம் உருவத்தை மாற்றிக்கொண்டு புதிய உருவங்கள் வழியாகச் சண்டையிடுகிறான் ஸன் வூ கோங். இத்தனை மந்திர சக்திகள், பலமும் நிறைந்த அவன் யாரால் அடக்கப்படுகிறான்; அதற்கிடையில் வேறு என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் கதை. புராணக் கதைகளின் இயல்புக்கு ஏற்ப இந்தக் கதையில் அடுத்தடுத்து பல்வேறு மாயாஜாலங்கள் நிகழ்கின்றன.

சீனப் பழமொழிக் கதைகள்

உலகம் முதன்முதலில் தோன்றியபோது வானம் நம் தலையில் முட்டும் அளவுக்கு இருந்தது; ஒருவர் நெல்லை உலக்கையால் குத்தியபோது தொடர்ந்து வானத்தின் மேல் இடித்து இடித்து, அது தொலைவில் விலகிப் போய்விட்டது என்றொரு கதை உண்டு. அதேபோல, இந்தப் புத்தகத்தில் வரும் ஒரு கதையில் வரும் பாங்கு என்பவரே உலகைப் படைக்கிறார். ஆரம்பத்தில் பூமியும் வானமும் ஒரு முட்டையைப் போலிருந்தன. அந்த முட்டையின் வெள்ளைக்கரு வானமாகவும், மஞ்சள் கரு பூமியாகவும் மாறியது. சீனர்கள் மஞ்சள் நிறம் தோய்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. வானத்தை விலக்கி வைத்தவர் பாங்கு என்கிறது கதை.

உலகம் எவ்வளவு பெரியது என்பதைப் பலரும் உணர்வதில்லை. அவர்களது பார்வை விசாலமடைய வேண்டும் என்பதற்காக ‘கிணற்றுத் தவளையாக இருக்காதே' என்று சொல்வார்கள். அது போன்றதொரு குட்டிக் கதை இப்புத்தகத்தில் உண்டு.

வெறுமனே வாயிலேயே பேசி, ஏதோ பெரிய விஷயம் நடந்துவிட்டதைப் போலப் பலரும் போலித் தோற்றத்தை உருவாக்க விரும்புவார்கள். உண்மையில் நடந்த விஷயம் சாதாரணமாகத்தான் இருக்கும். இப்படிப் பேசியே ஏமாற்றுவதை சென்னைத் தமிழில் 'வாயில் வடை சுடுதல்' என்று கூறுவார்கள். சீனாவிலும் அது போன்றதொரு பழமொழியும் கதையும் இருக்கின்றன. அது ‘பசியைப் போக்க வரைந்து வைத்த பணியாரம் பயன்படாது'.

நிஜப் பணியாரமே பசியைப் போக்கும் என்ற அடிப்படையில் இந்தக் கதை கூறப் பட்டுள்ளது. இப்படிப் பழமொழிகளை அடிப்படையாகக் கொண்ட பல குட்டிக்கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. டிராகன் என்ற கற்பனைக் கதா பாத்திரம் கடல்நாக அரசன் என்பதை இந்தப் புத்தகம் வழியே அறிய முடிகிறது.

இடி தெய்வத்தின் பரிசு

மூன்றாவது புத்தகத்தின் தலைப்புக் கதையான ‘இடிதெய்வத்தின் பரிசு', பைபிளில் வரும் நோவாவின் கப்பல் கதைக்கு இணையானது. ஒரேயொரு வேறுபாடு, இதில் இடியை உருவாக்கும் தெய்வத்தை ஒரு விவசாயியே எளிதாகப் பிடித்துக் கூண்டில் அடைத்துவிடுகிறார். அதன் பிறகு இடி தெய்வம் என்ன ஆனது, இடி தெய்வத்தின் சக்தி எப்படிப்பட்டது, அது என்ன பரிசு தந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். குழந்தைகளின் கற்பனையைத் தூண்டும் 40-க்கும் மேற்பட்ட சீன மாயாஜால, சாகசக் கதைகள் அடங்கிய விரிவான தொகுப்பு இது.

‘ஸன் வூ கோங்' ஒரு சின்ன புராணக் கதை, குட்டிக் கதைகள் அடங்கிய தொகுப்பு ‘சீனப் பழமொழிக் கதைகள்' என்றால், சற்றே பெரிய சீனச் சிறார் கதைகள் அடங்கிய தொகுப்பு ‘இடி தெய்வத்தின் பரிசு'. இந்த மூன்று புத்தகங்களையும் சிங்கப்பூரில் வாழும் ஜெயந்தி சங்கர் அனைவரும் படிக்கும் மொழிநடையில் தந்துள்ளார்.

ஸன் வூ கோங் (சீனப் புராணக் கதை), சீனப் பழமொழிக் கதைகள்,
இடி தெய்வத்தின் பரிசு (சிறார் சீனக் கதைகள்) - மூன்று புத்தகங்கள்.
தமிழில்: ஜெயந்தி சங்கர்,
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை - 18. தொலைபேசி: 044 - 2433 2924

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in