Last Updated : 24 Sep, 2014 12:25 PM

 

Published : 24 Sep 2014 12:25 PM
Last Updated : 24 Sep 2014 12:25 PM

மூளை என்ற முதலாளி

சூரியன் மறைந்த அந்தி நேரம். நிலா டீச்சர் குடும்பத்தினர் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கவின் அவ்வப்போது சப்… சப்... எனக் கைகளால் உடம்பெங்கும் அடித்துக் கொண்டிருந்தான்.

வேறொன்றுமில்லை, கொசுக்கள் அவனைச் சூழ்ந்து கடித்துக் கொண்டிருந்தன. கடித்த இடங்களில் கைகளால் அடித்து கவின் கொசுவை விரட்டிக் கொண்டிருந்தான்.

திடீரெனக் கவினுக்குக் கேள்வி பிறந்தது.

“அம்மா! என் கால்ல கொசு கடிக்கிற இடத்துக்கு என் கை உடனே போயிடுது. காலில கொசு கடிக்கிறது கைக்கு எப்படிம்மா தெரியுது?” என்று கேட்டான் கவின்.

“இவனுக்கு மட்டும் எப்படிம்மா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?” என்று ரஞ்சனி சிரித்தாள்.

“கவினுக்கு வரும் சந்தேகங்களாலதான் நீயும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது” என்று கூறிய நிலா டீச்சர், “கவின்! நல்ல சந்தேகத்தைத்தான் நீ கேட்டிருக்க” என்றார்.

சிரிப்பை நிறுத்திய ரஞ்சனி, “விளக் கமா சொல்லுங்கம்மா” என்றாள்.

“ஆயிரமாயிரம் அதிசய நிகழ்வுகள் நடக்கிற இடம் நம்ம உடம்புன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இப்ப நான் சொல்ல வர்ற விஷயமும் அப்படிப்பட்டதுதான்.

நம்ம உடம்போட தலைவனா இருந்து, ஒட்டுமொத்த செயல்களை யும் கட்டுப்படுத்தற வேலைய மூளை செய்யுது. உடம்புல ஒவ்வொரு பாகத்துல நடக்கிற நிகழ்வுகள பத்தி எல்லாத் தகவலும் உடனே மூளைக்குப் போய்விடும்.

அடுத்து என்ன செய்யணும்னு மூளை உத்தரவு போடும். அந்த உத்தரவுகள் வேக வேகமாக அந்தந்தப் பாகத்துக்கு எடுத்துச் செல்லப்படுது. உத்தரவு கிடைச்ச உடனேயே, குறிப்பிட்ட பகுதியில அந்த உத்தரவு செயல்படுத்தப்படும்.

இப்படி உடம்போட பல பாகங்களில இருந்து மூளைக்குத் தகவல்களை எடுத்துச் செல்றதுக்கும், மூளை போடுற உத்தரவுகள உடம்போட மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் இருவழித் தகவல் போக்குவரத்துப் பாதை உடம்புல செயல்படுது.

இப்படி நடக்கிற தகவல் பரிமாற்ற வேலையை நரம்புகள் செய்கின்றன. நரம்புகளோட இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கிற வேலையைத் தண்டுவடம் செய்யுது."

“அப்படியா… ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா. இதையெல்லாம் நம்பவே முடியல” என்றாள் ரஞ்சனி.

“நம்ம உடம்புல தகவல் பரிமாற்றம் நடந்துகிட்டு இருக்குங்கிறத நாம தெரிஞ்சுக்க முடியுமா?” என்று கவின் கேட்டான்.

“ம்… சில பரிசோதனைகள் மூலமா புரிஞ்சுக்க முடியுமே. நாம இப்போ ஒரு பரிசோதனை செய்வோம்” என்ற நிலா டீச்சர், “கவின்! ஒரு பழைய போஸ்ட் கார்டை எடுத்துட்டு வா” என்றார். போஸ்ட் கார்டு வந்தது.

“இத வச்சு என்னம்மா செய்யப் போறீங்க?” என்றாள் ரஞ்சனி.

“ரஞ்சனி, நீ இந்த போஸ்ட் கார்டை பிடி. உன்னோட வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் கார்டைப் பிடிச்சுக்கணும். கவின்! நீ கார்டுக்குப் பக்கத்துல உன் வலது கை கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் தயாரா வச்சுக்கணும். ரஞ்சனி கார்டைக் கீழே விட்டா, உன் ரெண்டு விரல்களால் உடனே அதைப் பிடிச்சிடணும். ரெடியா?” என்றார் நிலா டீச்சர்.

“ஓகே… ரெடிம்மா” என்றனர் இருவரும்.

ரஞ்சனி கார்டை விடத் தயாரானாள். அவள் விடும்போது கார்டைப் பிடிப்பதற்காகத் தனது இரு விரல்களை கார்டுக்கு அருகில் தயாராக வைத்திருந்தான் கவின்.

ரஞ்சனி கார்டை விட்டாள். ஆனால், கவினால் அதைப் பிடிக்கவில்லை. கார்டு கீழே விழுந்துவிட்டது. மீண்டும் ரஞ்சனி அதேபோல் கார்டைக் கீழேவிட்டாள். இப்போதும் கவினால் பிடிக்க முடியவில்லை. இப்போது கவின் கார்டைப் போட்டான். ரஞ்சனியாலும் பிடிக்க முடியவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் கார்டைப் பிடிக்கலை. இப்போ நான் பிடிக்கிறேன் பாருங்க” என்ற நிலா டீச்சர், வலது கையில் பிடித்திருந்த கார்டைக் கீழே விட்டார். அதை இடது கையின் இரண்டு விரல்களால் பிடித்துவிட்டார். இவ்வாறு தொடர்ந்து அவர் கார்டைக் கீழே விட்டு, பிடித்தார்.

“அம்மா! நீங்க கார்டைவிட்டு நீங்களே பிடிக்கிறீங்க. நான் போடுற கார்டை நீங்க பிடிங்க பார்க்கலாம்” என்றான் கவின்.

“சரி” என்றார் நிலா டீச்சர்.

கவின் கார்டைப் போட்டான். ஆனால் நிலா டீச்சரால் பிடிக்க முடிய வில்லை. கவினும், ரஞ்சனியும் சிரித்தார்கள்.

“ஓகே! என்னால மட்டுமல்ல, யாராலயும் பிடிக்க முடியாது. அதாவது நம்ம போடுற கார்டை நம்மால பிடிக்க முடியும். அடுத்தவங்க போடுற கார்டை நம்மால பிடிக்க முடியாது” என்றார் நிலா டீச்சர்.

“ஏன்னு சொல்லுங்கம்மா” என்றான் கவின்.

“கவின் கையில கார்டு இருக் கிறப்போ, முதலில் ரஞ்சனி அந்த கார்டைப் பார்த்துகிட்டே இருக்கணும். எப்போ கார்டு கீழே விழுதோ, அதை ரஞ்சனியின் கண்கள் பார்த்த பிறகு அந்தத் தகவல் நரம்பு மண்டலம் வழியாக அவளோட மூளைக்குப் போய் சேருது.

உடனே அந்த கார்டை பிடிக்கச் சொல்லி ரஞ்சனியின் விரல்களுக்கு, மூளை உத்தரவு போடுது. அந்த உத்தரவு கிடைச்சு, ரஞ்சனியின் விரல்கள் பிடிப்பதற்குள் கார்டு கீழே போய் சேர்ந்துடும்.

அதே கார்டை நாம கீழே போடுறப்போ, நம்ம மூளைதான் ஒரு கைக்கு அந்த கார்டை கீழே விடும்படி உத்தரவிடுது. அந்த கார்டு எப்போ விழும் என்பது மூளைக்குத் தெரியும். ஒரு கை கார்டைக் கீழே விடும்போது, அதைப் பிடித்துக் கொள்ளும்படி அடுத்த கைக்கு உடனடியாக மூளை உத்தரவிடும்.

இரண்டு உத்தரவுகளுக்கும் இடையிலான இடைவெளி ரொம்பக் கம்மி. அதனால நாம போடுற கார்டை, நம்மால பிடிக்க முடியுது” என்று முடித்தார் நிலா டீச்சர்.

“செல்போனைப் போல உடம்புக்குள்ளயும் தகவல் பரிமாற்றம் நடப்பதைப் பரிசோதனை மூலமா ரொம்ப சுலபமா புரிய வைச்சிட்டீங்கம்மா” என்றான் கவின்.

“உன்னைக் கொசு கடிச்சதாலதான் இவ்வளவு விஷயங்கள தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அந்தக் கொசுவுக்குத்தான் நீ நன்றி சொல்லணும்” என்றாள் ரஞ்சனி.

அனைவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x